தமிழில் வெளியான ‘கட்டா குஸ்தி’ படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாபாத்திரத்தையும், மலையாளத்தில் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் ஜெயபாரதி கதாபாத்திரத்தையும் ஒப்பிட்டு அந்தந்த படங்களின் வழியே அலசுவோம்.
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவான படம் ‘கட்டா குஸ்தி’. கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. குறிப்பாக ‘ஆணாதிக்கத்துக்கு எதிரான படம்’ என பாராட்டப்பட்டது. கடந்த அக்டோபர் 28-ம் தேதி விபின் தாஸ் இயக்கத்தில் பாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான தற்போது ஓடிடியில் வரவேற்பை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட இந்த இரண்டு படங்களும் பேச முனையும் முக்கியமான கருத்துகளுடன், சில பல ஒற்றுமைகளையும் கையாண்டிருக்கின்றன.
குறிப்பாக ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’-வில் கராத்தே கற்றுக்கொள்ளும் நாயகி, ‘கட்டா குஸ்தி’-யில் குஸ்தி பழகிய நாயகி இருவரும் அதை எந்த இடத்தில் பயன்படுத்துகின்றனர் என்பதையும் அதற்கான தேவைகள் எழும் காரணத்தையும் படம் பதிவு செய்கிறது. மேலும், குடும்ப வன்முறைகள் பற்றியும் இரண்டு படங்களும் பேசுகின்றன. குறிப்பாக ‘கட்டா குஸ்தி’யைவிட, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ பெண்ணுக்கான வெளியை அழுத்தமாக்குகிறது.
‘திருமணம்’ எனும் சமூக அமைப்பு முறையில் ஒரு பெண்ணின் கனவுகள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகின்றன என்பதையும், குடும்ப வன்முறைகளையும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ ஜெயபாரதியின் வழியாகவும், ‘கட்டா குஸ்தி’யின் கீர்த்தி வழியாகவும் இரண்டு படங்களும் அணுகுகின்றன. தொடக்கத்திலிருந்தே ஜெயாவின் மேற்படிப்பு கனவும், கீர்த்தியின் ‘குஸ்தி’ போட்டிகளுக்கான கனவும் ‘திருமணம்’ எனும் ஓமகுண்டத்தில் வைத்து ஒட்டுமொத்தமாக எரிக்கப்படுகின்றன. ஜெயாவுக்கு ‘கல்யாணத்துக்கு அப்றம் படிக்கலாம்’ என்ற சமாதானமும், கீர்த்திக்கு ‘கல்யாணத்துக்கு அப்றமும் குஸ்தில கலந்துகலாம்’ என்பதுடன் சேர்த்து ‘அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்’ என்ற சென்டிமென்டும் திருமணத்திற்கான ஒப்புதலை பெறும் ஆயுதங்களாகின்றன.
திருமணத்திற்கு பிறகு இரண்டு கதாபாத்திரங்களின் ஆகச் சிறந்த வேலை, சமையலில் தங்களின் பராகிரமத்தைக் காட்டுவது. இங்கே ஜெயா யூடியூப்பில் பார்த்து பலகாரம் சுடுகிறார்; அங்கே கீர்த்தி தன் கணவர் வருவதற்குள் கோழிக்கறி குழம்பு சமைக்க மல்லுக்கட்டுகிறார். இந்த இரண்டு படங்களில் தொடக்கமும் ஆகச் சிறந்த சமூகத்தின் யதார்த்ததை கண்ணாடியாக பிரதிபலிக்கிறது.
அடுத்து குடும்ப வன்முறை எனும் புள்ளியில் ஜெயா தன் கையிலெடுக்கும் ஆயுதமும், கீர்த்தி கையிலெடுக்கும் ஆயுதத்திலும் இரண்டு படங்களின் அணுகுமுறையும் வேறுபடுவதை உற்றுநோக்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டு இயக்குநரின் ‘கட்டா குஸ்தி’யின் கீர்த்தி ‘குஸ்தி’ அறிந்திருந்தும் தன் கணவனை திருப்பி அடிப்பதில்லை. ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’-வின் ஜெயாவும் 21 அடிகள் வரை அமைதி காக்கிறார். அடுத்து திருப்பி அடிக்கும் இடத்தில் ஜெயா கவனிக்கப்படுகிறார். இரண்டு கதாபாத்திரங்களும் கணவரால் வன்முறைக்குள்ளாக்கப்படும்போது ‘அது குடும்பம்ணா அப்டிதான்’ என நார்மலைஸ் செய்யும் சமூகம், பாதிக்கப்பட்டவர் எதிர்வினையாற்றும்போது கொந்தளிக்கிறது. இதில் கணவரை அடித்த ஜெயாவும், கணவரை தாக்க வந்தவர்களை அடித்த கீர்த்தியின் செயல்பாடுகள் வெவ்வேறான போதிலும் பலியாக்கப்படுவது இருவர்கள் தான்.
வரதட்சணை வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் ஒன்றும் புனிதர்கள் அல்ல; அவர்களும் குடும்ப வன்முறையில் கைதேர்ந்தவர்கள் என்பதை நுணுக்கமான சொன்ன விதத்தில் இரண்டு படங்களும் மெச்சத்தக்கவை. ‘கட்டா குஸ்தி’யில் விஷ்ணு விஷாலின் மாமா (கருணாஸ்) கதாபாத்திரமும், ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’-யில் பாசில் ஜோசப்பின் அண்ணன் கதாபாத்திரமும் ஆணாதிக்கவாதிகளாக இருப்பது தேர்ந்த ஒப்புமை. ஆனால் ‘கட்டா குஸ்தி’யில் கருணாஸின் கதாபாத்திரம் டாக்ஸிக் மனநிலையில் காட்சிபடுத்தபட்டிருக்கும்.
இப்படி இந்த இரண்டு படங்களிலும் ஒற்றுமைகள் இருப்பதாக தோன்றினாலும், ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ பேசும் அழுத்ததிலிருந்து விலகி நிற்கிறது ‘கட்டா குஸ்தி’. ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’-வின் சிறப்பம்சம் அது பெண்ணுக்கான பொருளாதார சுதந்திரத்தின் தேவையை அழுத்தமாக பதியவைக்கிறது. கணவரும், பெற்றோரும் கைவிட்ட பிறகு மீண்டெழச்செய்வது அவளின் பொருளாதார சுதந்திரம் தான் என்பது ஒரு க்ளாஸ் மூவ்.
பெண்களிடம் ஆண்கள் அடிவாங்குவது ‘கேவலம்’, ‘அசிங்கம்’ என்பதையொட்டிய களத்தை உருவாக்கும் இரண்டு படங்களிலும் ‘கட்டா குஸ்தி’ பாதை மாறியிருப்பதை உணர முடியும். ‘கட்டா குஸ்தி’யின் இறுதிக்காட்சியில் கூட இயக்குநரால் நாயகனை வீழ்த்தி நாயகி வெல்வது போன்ற சீனை அமைக்க முடியவில்லை. நைஸா வில்லன் ஒருவரை நுழைத்து நாயகனின் வீரத்தை பறைசாற்றியிருக்கும் ஆணாதிக்க தன்மையில் கெட்டிப்பட்டு பெண்ணியம் சார்ந்த படைப்பிலிருந்து ‘கட்டா குஸ்தி’ நீர்த்துப் போயிருக்கும்.
ஆனால், ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’வில் பெண்ணுக்கு தேவை நீதி, சமத்துவம், சுதந்திரம் என்ற வசனங்களை நியாயப்படுத்தும் வகையில் விவாகரத்து பெறுகிறார் ஜெயா. மேற்கண்ட அந்த வசனங்களின் வழியே ஜெயா பொருளாதார சுதந்திரத்துடன் நீதியைப் பெற்று திரும்பும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அழுத்தம் கூட்டியிருக்கும். அந்த வகையில் ‘கட்டா குஸ்தி’ படத்தில் ‘குஸ்தி’யில் தேர்ந்த கீர்த்தியால் குழந்தைக்கு அம்மாவாகும், திருந்தி வந்த கணவனை பாதுகாக்கும் நல்ல மனைவியாவகவும் இருக்க முடிகிறதே தவிர, தனது கனவுகளை எட்டிப்பிடிக்கும் பெண்ணாக இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.
+ There are no comments
Add yours