வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றிரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். இவ்விழாவில் எஸ்.ஜே.சூர்யாவும் கலந்து கொண்டார். இவர் ஏன் இந்த விழாவிற்கு வந்துள்ளார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்தது.
இந்நிலையில், நடிகர் விஜய் பேசும் போது முக்கியமான புதிய தகவல் ஒன்றினை தெரிவித்தார். அதாவது, வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருப்பதை அவர் உறுதி செய்தார். “வாரிசு படத்தில் சில காட்சிகள் என்றாலும் அதில் நடிக்க ஒப்புக் கொண்ட எஸ்.ஜே.சூர்யா மற்றும் குஷ்பூ ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். எஸ்.ஜே.சூர்யாவுக்கு நிறைய கனவுகள் இருக்கு. அனைத்தும் விரைவில் நிறைவேறும்” என்றார் விஜய்.
எஸ்.ஜே.சூர்யா வாரிசு படத்தில் நடித்திருக்கிறார் என்பது இதுவரை வெளிவராத தகவலாகவே இருந்தது. தற்போது விஜய் அதனை உறுதி செய்திருக்கிறார். விஜய் உடன் மெர்சல் படத்தில் தன்னுடைய அசாத்திய நடிப்பால் எஸ்.ஜே.சூர்யா மிரட்டி இருப்பார்.
வாரிசு படத்தில் ஏற்கனவே மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ளது வாரிசு.
இந்தத் திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து, படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours