2022ல் எதிர்பார்த்து ஏமாற்றிய தமிழ் படங்கள்

Estimated read time 1 min read

2022ல் எதிர்பார்த்து ஏமாற்றிய தமிழ் படங்கள்

25 டிச, 2022 – 13:07 IST

எழுத்தின் அளவு:


Expected-and-disappointed-Tamil-films-in-2022

2022ம் ஆண்டில் சீனியர் ஹீரோவான ரஜினிகாந்த் தவிர மற்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகின. யாரும் எதிர்பாராத விதமாக கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது.

அதே சமயம் சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தைத்தான் தந்தன. விஜய் நடித்து வெளிவந்த ‘பீஸ்ட்’, அஜித் நடித்து வெளிவந்த ‘வலிமை’ படங்கள் 100 கோடி வசூலித்ததாக சொல்லப்பட்டாலும் அவையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

இந்த ஆண்டில் ரசிர்களால் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றத்தைத் தந்த சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் இருக்கின்றன.

எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். இயக்குனர் பாண்டிராஜ் சென்டிமென்ட் கதைகளின் ஸ்பெஷலிஸ்ட். ஆனால், அவர் ஆக்ஷன் பக்கம் மீண்டும் தாவிய இந்தப் படம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. விஷால் நடித்து அவர் இயக்கத்தில் 2014ல் ஆக்ஷன் படமாக வெளிவந்த ‘கதகளி’ படம் தோல்வியைத் தழுவியது. அத்தோல்விக்குப் பிறகு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கி பெரிய வெற்றியைப் பெற்றார். அதே சென்டிமென்ட் வரிசையில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தையும் இயக்கினார். மீண்டும் ஆக்ஷன் பக்கம் வந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் தோற்றுப் போனார். தெரிந்த சென்டிமென்ட் பக்கமே படமெடுப்பது நல்லது என்பது பாண்டிராஜுக்குப் புரிந்திருக்கும்.

குலு குலு
ரத்னகுமார் இயக்கத்தில், சந்தானம் கதையின் நாயகனாக நடித்த படம். இது வழக்கமான சந்தானம் படம் இல்லை என்பதை முன்னரே அறிவித்துவிட்டார்கள். ஆனாலும், நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக மாறிய சந்தானத்திடம் நகைச்சுவைப் படங்களை மட்டுமே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர் சீரியசாக நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை என்பதை இந்தப் படத்தின் தோல்வி நிரூபித்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை சந்தானம் மீண்டும் புரிந்து கொண்டு நடிப்பதே அவருக்கு நல்லது.

கோப்ரா
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். படத்தின் டீசர், டிரைலர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விதவிதமான தோற்றங்களில் விக்ரம் இருப்பதால் நிச்சயம் மாறுபட்ட ஆக்ஷன் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ‘டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள்’ என வித்தியாசமான படத்தைக் கொடுத்த அஜய் அதே பாணியில் இந்தப் படத்தையும் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விக்ரமின் விதவிதமான தோற்றமும், அவரது ஈடுபாடும் வீணாகிப் போனது.

கேப்டன்
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த படம். சயின்ஸ் பிக்ஷன் படம் என்று சொல்லிவிட்டு ஒரு ‘காமெடி’ படத்தை எடுத்து ஏமாற்றிவிட்டார்கள்.

ப்ரின்ஸ்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவந்த படம். எதற்காக இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதித்தார் என்பது ஆச்சரியமே. நகைச்சுவை என்ற பெயரில் நமது பொறுமையை அதிகம் சோதித்த படம். இப்படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

ஏஜன்ட் கண்ணாயிரம்
தெலுங்கில் வெளிவந்து வசூல் ரீதியாக வெற்றி பெற்ற ஒரு படத்தைத் தமிழில் இப்படியா ரீமேக் செய்வார்கள் என விமர்சனம் எழுந்த படம். இந்தப் படம் வெளிவந்து சில காட்சிகளாவது ஓடியது எத்தனை ரசிகர்களுக்குத் தெரியும் ?.

டிஎஸ்பி
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன்’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், ‘சீமராஜா’ என்ற தோல்வியைக் கொடுத்த போதே தன்னை மீண்டும் சுயபரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் தேய்ந்து போன அரதப் பழசான ஒரு போலீஸ் கதையுடன் ‘டிஎஸ்பி’ என்ற இந்தப் படத்தைக் கொடுத்து விஜய் சேதுபதியின் மார்க்கெட்டையும் இப்படி தள்ளியிருக்க வேண்டாம். இப்படி ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு மறுநாளே படம் வெற்றி என கேக் வெட்டி கொண்டாடியதற்கெல்லாம் ஒரு ‘மன தைரியம்’ வேண்டும்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்
சுராஜ் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் வெளிவந்த படம். சுராஜ் – வடிவேலு இணைந்த படங்கள் நகைச்சுவையில் இன்னமும் ‘ரிப்பீட்’ அடிக்க வைத்து காமெடி சேனல்களில் ரசிக்க வைக்கின்றன. அதே எண்ணத்தில் இந்த ‘ரிட்டர்ன்ஸ்’ ரசிக்க வைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ‘ரிவிட்’ அடித்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் இருவரும். எதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என்பதை யாராவது கேட்டு சொல்ல வேண்டும். இப்படத்தில் நடித்ததற்கு வடிவேலு வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருக்கலாம்.

மாறன்
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து ஓடிடியில் நேரடியாக வெளியான படம். நல்ல வேளையாக படத்தைத் தியேட்டர்களில் வெளியிடவில்லை. அப்படி வெளியிட்டிருந்தால் ஒரு காட்சியாவது நிரம்பியிருக்குமா என்பது சந்தேகம்தான். தியேட்டர்களில் வெளியிட்டிருந்தால் ஓடாது என்று தெரிந்துதான் ஓடிடியில் வெளியிட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திய படம். தனுஷ் நடித்து இதுவரையில் வெளிவந்த படங்களில் மிகவும் மோசமான படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது இந்தப் படம். படத்தில் தனுஷின் தலையீடு ஏதுமில்லை என்று நிரூபிக்க இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்து ஒரு படத்தை இயக்கி வெற்றி பெற்றே ஆக வேண்டும்.

வெற்றி, தோல்வி என்பது சினிமாவில் மாறி மாறி வரும் விஷயம் தான். தொடர் தோல்விகளைக் கொடுத்தவர்கள் கூட நல்ல படங்கள் மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் திரும்பியிருக்கிறார்கள். அது போல இந்த வருடத்தில் தோல்விப் படங்களைக் கொடுத்தவர்கள் அடுத்த வருடத்தில் புத்துணர்வுடன் மீண்டு வருவார்கள் என்று வாழ்த்துவோம்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours