யார் முதலில் போவது?.. வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு!

Estimated read time 1 min read

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா அரங்கிற்குள் யார் முதலில் செல்வது என்ற நெரிசலில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, சங்கீதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில், தமிழில் ‘வாரிசு’ என்றப் பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் இருமொழிகளில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தை தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாக உள்ளது.

image

நடிகர் விஜய்யின் படங்களுக்கு எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கிறதோ அதைவிட, அவரது ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடிகர் விஜய் அரசியல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும், அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் தடைகளை சந்தித்து வருகின்றார். இதனை வெளிப்படுத்தும் விதமாக தனது படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், குட்டி கதை ஒன்றை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தக் குட்டி கதையின் மூலம் தனது நிலைப்பாட்டை ரசிகர்களுக்கு தெரியவைப்பார் நடிகர் விஜய். இதனால் விஜய்யின் ஆடியோ வெளியீட்டு விழா என்றாலே எப்போதும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும்.

image

கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு இந்தாண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு பல்வேறு காரணங்களால் ஆடியோ வெளியிட்டு விழா வைக்காதது, அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

image

இந்நிலையில், கொரோனா முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ ஆடியோ விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆடியோ விழாவிற்காக பிரம்மாண்டமான முறையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே அரங்கில் குவிந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது செல்போன்களில் ஒளியைப் பாய்ச்சி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், தாய் ஷோபா கலந்து கொண்டனர். அதேபோல், படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

image

இதனிடையே, நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கு அருகே விஜய் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் யார் முதலில் உள்ளே செல்வது என்ற போட்டியில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours