2022 – வரவேற்பைப் பெற்ற ஒரே புதுமுக ஹீரோ
24 டிச, 2022 – 15:00 IST
தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் அறிமுகமாகும் அளவிற்கு கதாநாயகர்கள் அதிகம் அறிமுகமாவதில்லை. அப்படியே அறிமுகமாமனாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றியைப் பெறுகிறார்கள். இந்த ஆண்டிலும் ஒரு சில கதாநாயகர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே முன்னணி கதாநாயகர்களைக் காட்டிலும் அதிக வரவேற்பையும், வசூலையும் பெற்றார். அவர் ‘லவ் டுடே’ படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்து 2019ல் வெளிவந்த ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப். முதல் படத்திலேயே இயக்குனராகப் பெரிய வெற்றியைப் பெற்றவர், அவரது இரண்டாவது படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் அறிமுகமானார். படத்தின் டிரைலரிலேயே பரபரப்பை ஏற்படுத்தியவர், படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
ஒரு அறிமுகக் கதாநாயகரின் படம் இந்த அளவிற்கு வசூலைக் குவித்து நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் டப்பிங் ஆன ‘லவ்டுடே’ படம் அங்கும் லாபத்தைப் பெற்றுத் தந்தது. பிரதீப்பின் அடுத்த படம் என்ன அவரே இயக்கமா, நடிப்பா என கோலிவுட் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
+ There are no comments
Add yours