Seeman Wishesh Cheran’s Tamilkkudimagan Teaser | நம்ம என்ன கீழ் சாதியா?… வரவேற்பைப் பெறும் தமிழ்க்குடிமகன் டீசர் – சீமான் வாழ்த்து

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளி சேரன். இயக்குநராக இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக்கொடிக்கட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நிற்பவை. இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் முத்திரை பதித்தவர் சேரன். சில காலம் நடிக்காமல் ஒதுங்கியிருந்த சேரன் தற்போது தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை இசக்கி கார்வண்னன் இயக்க சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இதன் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. டீசரில், சாதிய கொடுமைகளும், சாதிய கொடுமைகளுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளன. டீசர் ரசிகர்களிடம் மட்டுமின்றி பிரபலங்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தின் டீசரை வாழ்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, என் அன்பு இளவல், என்னுயிர் தம்பி, ஈடு இணையற்ற திரைக் கலைஞன், ஆகச்சிறந்த படைப்பாளி இயக்குநர் சேரன் அவர்கள் நடித்திருக்கிற படம் ‘தமிழ்க்குடிமகன்’. இந்தப் படத்தின் பாடல் உரிமையை, என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்கள் பெற்றிருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். 

https://www.youtube.com/watch?v=gfpSbRacy1o

பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருப்பதை அறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். பாடல் வெற்றியடைவது போல, இந்தப் படமும் வெற்றியடைய வேண்டும் என்று உள்ளன்பு கொண்டு வாழ்த்துகிறேன்.

இன்றைக்கு சமூகத்தில் இருக்கிற பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு பாராட்டுகிற சாதியப் படிநிலைகள் எவ்வளவு பெரிய கொடுமை என்பதை, அதை அனுபவித்து அதிலே வாழ்ந்து வருபவனுக்குத் தான் அக்கொடுமையின் வலி புரியும். தீண்டாமை என்பதும், அடக்குமுறை என்பதும், ஒடுக்குமுறை என்பதும் வார்த்தையில் இருந்தால் வலிக்காது, அதை அனுபவித்துப் பார்த்தால் தான் அது எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் உணர முடியும். அது உயிர்வலியை விட மிகுந்த வேதனையைத் தரக்கூடிய ஒன்று. 

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் “சாதிய இழிவை துடைத்தெறியப் போராடாமல் இருப்பதை விடச் செத்து ஒழிவதே மேலானது”, “நான் யாருக்கும் அடிமை இல்லை, எனக்கும் யாரும் அடிமை இல்லை” என்கிறார். இந்த நிலைப்பாடு தான் நம் எல்லோருக்கும் இப்போது தேவைப்படுகிறது. ஐயா பெரியார் அவர்கள் “நான் உயர்ந்த சாதி என்று எண்ணிக் கொள்ளும் பெருமக்கள் தனக்குக் கீழே யாரும் தாழ்ந்த சாதி இல்லை என்று எண்ணிக்கொண்டால் இங்கே எந்த பிரச்சனையும் இல்லை” என்கிறார். இது இன்று நேற்றல்ல, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உன்னதக் கருத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவை, தமிழ் மறையோன் வள்ளுவப் பெருமகனாருக்கே இருந்துள்ளது என்றால், அன்றிலிருந்தே இது தொடர்கிறது. “பகுத்துண்டு பல் உயிர்கள் ஓம்புக” என்று பாட வேண்டிய அவசியம் அதனால் தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி”.

பிறருக்கு கொடுப்பவன் உயர்ந்தவன்; தனக்கு தனக்கு என்று பதுக்கிக் கொள்பவன் இழிமகன் இழி சாதி என்று ஒளவைப் பெருமாட்டி பாடுகிறாள்.

“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்” – என்கிறார் பெரும்பாவலன் பாரதி.

“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கிற தென்பானும் இருக்கின் றானே!”.

”சாதி தமிழில்லை தமிழனுக்குச் சாதி இல்லை”,

“கடவுள் வெறி சமயவெறி
கன்னல்நிகர் தமிழுக்கு
நோய் நோய் நோயே!

இடைவந்த சாதி எனும்
இடர்ஒழிந்தால் ஆள்பவள்நம்
தாய் தாய் தாயே!”

“சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று!
பாதியை நாடு மறந்தால் – மற்ற
பாதித் துலங்குவ தில்லை!”

“சாதி களைந்திட்ட ஏரி – நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே – நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்”

என்று புரட்சி பாவலன் பாரதிதாசன் பாடுகிறார்.

அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை, தீண்டாமை இந்தக் கொடுமைகள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது.

“பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா ?
இறைச்சி தோல் எலும்பினும் இலக்கமிட்டுஇருக்குதோ?” – என்று சிவாக்கியர் பாடுகிறார்.

“சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க?” – என்று நம்முடைய தாத்தா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடியது போல இதுவரைக்கும் இந்தக் கொடுமைகள் தொடர்கிறது.

இன்னும் (சாதி)குடிப்பெருமைக்கு ஆணவக்கொலைகள் நடைபெறுகிறது. சாதி என்பது ஒரு மன நோய் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். மானுடச் சிந்தனையில் படிந்திருக்கும் புரையோடிப்போன அழுக்கு மட்டும் தான் அது.

எல்லோரையும் போல இரத்தமும், சதையும், பசியும், உறக்கமும், கனவும், கண்ணீரும் கொண்ட சக மனிதனை தாழ்த்தி, வீழ்த்தி சுகம் காண்கிற ஒரு மனநிலை என்பதற்குப் பெயர் மனநோயைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். அதை அழித்து, ஒழிக்கவேண்டும். அதற்கு ஒரு தலைமுறை தயாராக வேண்டும். அதுதான் இதில் முதன்மையானது. இன்றளவும் முடி திருத்தும் மருத்துவக்குலமான நாவிதர்களை இழிவாகப் பார்க்கிற போக்கு இருக்கிறது. முடி திருத்தும் அவர்களை மருத்துவர் குலம் என்று தான் அழைத்தார்கள். அவர்கள் தான் கோயிலில் வந்து வழிபாடு செய்தார்கள். பறையர்கள், வண்ணார்கள், நாவிதர்கள், புலிப்பானை சித்தர்கள் இவர்களெல்லாம் தான் அன்று கோயில்களில் ஓதினார்கள். பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு வந்தபிறகு இவர்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு, இன்றைக்கு இருக்கும் நிலை உருவாகிவிட்டது. ஆங்காங்கே சிற்றூர்களில் ஏற்படும் நோய்களுக்கு, காயங்களுக்கு எல்லாம் அவர்களே மருத்துவம் செய்தார்கள் அதனால் தான் மருத்துவர் குலம் என்று அழைக்கப்பட்டார்கள். பின் நாட்களில் தான் அவர்களுக்கு நாவிதர்கள் என்ற பெயர் வந்தது.

மதிப்புமிக்க நமது ஐயா சிங்காரவேலர் குறிப்பிட்டது போல ‘உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சாதியக் கட்டுமானம் இந்த இந்திய நாட்டில் தான் இருக்கிறது’ என்று குறிப்பிட்டார். வெளிநாட்டிலும் முடி திருத்தும் மக்கள் இருக்கிறார்கள், சலவைத் தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இப்படித் தான் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்படுகிறார்களா? இது ஒரு கொடும்போக்கு இதைத் தகர்க்க வேண்டும்.

“நீ பட்டறை கல்லாக இருந்தால் அடி தாங்கு! நீயே சம்மட்டியாக இருந்தால் ஓங்கி அடி!” என்கிறார் ஐயா அப்துல் கலாம் அவர்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகப் பட்டறை கல்லாக இருந்து அடி தாங்கிய தமிழ்ச்சமூகத்தின் பிள்ளைகள் இனி சம்மட்டியாக மாறி ஓங்கி அடிக்க வேண்டிய காலம் உருவாகி இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு நாம் ஓங்கி அடிப்போம். நொறுங்கி விழட்டும் இந்த சாதி-மதச் சாக்கடைத் துகள்கள். அதைத் தவிர வேறு வழி கிடையாது.

சாதி-மத உணர்ச்சி என்பது மானுடச் சமூகத்தின் மாபெரும் எதிரிகள் என்பதே தமிழ் இளம் தலைமுறை பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு கருத்தைப் பதிவு செய்வதற்குத் துணிந்த என் தம்பி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். இத்தகைய ஒரு கதைக்களத்தில் நடிப்பதற்குத் துணிந்த என் தம்பி சேரன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள், இந்தப் படத்தின் பாடல்களை வாங்கி வெளியிடுவோம் என்று இந்தப் படத்திற்கு உறுதுணையாக ஆதரவாக நிற்கின்ற என் ஆருயிர் இளவல் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும். ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படக்குழுவினர் அனைவருக்கும் என் பேரன்பும் வாழ்த்துகளும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ரஜினி, கமலிடம் பிடிக்காத விஷயம் – கே.பாலசந்தர் என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours