கோவை:
Silambam Record of 9 year Boy: ஒன்பது வயதில் 9 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் மற்றும் சுருள் வாள் சுற்றி சாதனை படைத்த கோவை சிறுவன் விமலேஷ்.
கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்று சொல்வதுபோல், விளையாட்டிற்கும் திறமைக்கு வயது என்பது தடையில்லை என்று நிரூபிக்கும் வகையில் 9 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் மற்றும் சுருள் வாள் சுற்றி கோவையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். கோவை சரவணம்பட்டி, காபி கடை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், தாரணி ஆகியோரின் மகன் விமலேஷ், கோவை முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கலை கழகத்தில் சுருள் வாள் மற்றும் சிலம்பம் சுற்றுவதை முறையாக பயின்று வந்துள்ளார்.
ஒன்பதே வயதான கோவை சிறுவன் விமலேஷ், தான் கற்று வரும் கலைகளில் மிகுந்த விருப்பம் கொண்டவர், கடுமையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த வீர விளையாட்டுகளில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் விமலேஷ், உலக சாதனை புரிய விரும்பினார்.
அதற்காக, தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்ட விமலேஷ், தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் தனது ஒரு கையில் சுருள் வாள்,இன்னொரு கையில் சிலம்பம் என இரண்டு கைகளிலும் இடைவிடாமல் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் சிலம்பத்தையும் சுருள்வாலையும் சுற்றி சாதனை படைத்தார். விமலேஷின் சாதனை, நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
தன்னம்பிக்கையும், இடைவிடாத முயற்சியால் இந்த சாதனையை சாதித்துள்ள சிறுவனுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தின் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் சிறுவன் விமலேஷுக்கு உற்சாகம் அளித்து ஊக்கப்படுத்தினார்கள்.
சாதனை மாணவன் விமலேஷிற்கு,நோபள் உலக சாதனை புத்தகத்தின் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை, வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழர் தற்காப்புக் கலைகளில் ஒன்றும், தமிழர்களின் வீர விளையாட்டுமான சிலம்பத்தில் ஆர்வம் கொண்ட ஒன்பதே வயதான சிறுவன் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கம்பு சுற்றுதல் என்றும் அறியப்படும் இந்த வீர விளையாட்டில், தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல முக்கியமான அம்சங்கள் உள்ளன. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் ஆகும்.
தமிழகத்தில் சிலம்பாட்டக் கழகங்கள் இந்த வீர விளையாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று வருகின்றனர்.
– Malathi Tamilselvan
+ There are no comments
Add yours