புதுச்சேரி:
நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்தக் கோயிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதேபோன்று கோயிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரமாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் காவல் துறையினரும், மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப்போல் இந்த சிலை இருந்தது. இதுகுறித்து கோயில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர். ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி உள்ளது என்று கூறினர்.
பின்னர், கோயில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்தபோது. அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும், நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் போன்ற புகைப்படங்கள் இருந்தன.
இச்சூழலில் பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் காவல் துறையினர் நித்தியானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பக்தர்களும் அந்த சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முருகன் கோயில் கட்டி அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– க. விக்ரம்
+ There are no comments
Add yours