துப்பாக்கியை காட்டி கலவரத்தை அடக்கிய போலீசாரின் சாமர்த்தியம்..!

Estimated read time 1 min read

ராமநாதபுரம்:

கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு கலவரத்தில் முடியும்முன், துப்பாக்கியை காட்டி போலீசார் ஒருவர் பெரும் கலவரத்தை அடக்கிய சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில் கடந்த 4 தினங்களுக்குமுன், கபடி போட்டி தொடங்கி நடைபெற்றது. அப்போது இரு ஊர்க்கிராம இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

 

இந்நிலையில், தாக்குதலில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர்கள் எதிர் தரப்பினரை, பதிலுக்குத் தாக்கியதாகத் தெரிகிறது.

இந்த இரு தாக்குதல் சம்பவத்துக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டு கிராமத்தினரும் கையில் அரிவாள் கம்பு, கட்டைகளுடன் மோதி கொள்ள திரண்டனர்.

தாக்குதல் தொடங்கி, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெரியவரை மற்றொரு கிராம இளைஞர்கள் அடித்ததை கண்ட போலீசார், அவர்களை விரட்டி முதியவரை மீட்டனர்.

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் குறைந்த அளவே போலீசார் இருந்தாலும் கலவரத்தை தடுக்க புத்திசாலித்தனமான நடவடிக்கையை முதுகுளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மேற்கொண்டார். அவர் தனது கைத்துப்பாக்கியை கையில் எடுத்து உயர்த்தியபடி, கலவரத்துக்கு தயாரானவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.

எஸ்.ஐ செல்வத்தின் கையில் துப்பாக்கியை பார்த்ததும் ஆவேசமாக காணப்பட்டவர்கள், சற்று தயக்கத்துடன் பின் வாங்க ஆரம்பித்தனர். எதிர் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் துப்பாக்கியை கண்டதும் பின் வாங்கிச்சென்றனர்.

வானத்தை நோக்கிச்சுடவில்லை… ஆவேசமாக காணப்பட்ட மக்கள் மீது தடியடி நடத்த வில்லை. அவர்களுக்கு தனது மிரட்டலான போலீஸ் தோரணையின் மூலம் துப்பாக்கியை தூக்கி காண்பித்து, கூடியிருந்தவர்களின் மனதில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி நடக்க இருந்த கலவரத்தை சாமர்த்தியமாக தடுத்து விரட்டி விட்டார். இதனால் அங்கு நடக்கவிருந்த பெரிய அளவிலான அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் முதுகுளத்தூர் போலீசார் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு அந்த கிராமங்களில் தற்போது 100க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                                                                                             – Gowtham Natarajan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours