சென்னை:
நடிகர் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நடிகை நயன்தாராவை அண்மையில் திருமணம் செய்துகொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கிவரும் தனது 61ஆவது படத்தில் நடித்து முடித்த பின்னர் விக்னேஷ் சிவனின் படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கவுள்ளார். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ளாராம் விக்னேஷ் சிவன். ஆனால் அது வழக்கமான திரைப்படம் அல்ல; விளம்பரப் படம்.
ஆம், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன்தான் இயக்குகிறார்.
இதற்கிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிய விளம்பர படம் ஒன்றில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தைத்தான் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு நேப்பியர் பாலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விளம்பர படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நடக்கவுள்ள இதே மாமல்லபுரத்தில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவ்விருவரும் நேரில் சென்று சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை அளித்திருந்தனர். ஆனால் அத்திருமண நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
– ஜெ.வி.பிரவீன்குமார்
+ There are no comments
Add yours