அதிமுகவில் நிலவி வரும் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது.
நடைபெற உள்ள 11 ஆம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இந்த கூட்டம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழில், பொதுக்குழு கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் காலை 9:15 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு வர வேண்டும் எனவும், கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவில் வாழ்த்து தெரிவிக்கப்பட உள்ளது. பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தப்பட உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை பதவி ரத்து செய்யப்பட உள்ளது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அதன் மீது விவாதம் நடத்தி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரை நடைபெற உள்ள பொதுக்குழுவிலேயே தேர்வு செய்யப்பட உள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவது தொடர்பான முடிவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளன. பொதுக்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதிமுக தலைமை உத்தரவு.
– RK Spark
+ There are no comments
Add yours