நாமக்கல்:
குடியரசு தலைவர் தேர்தலுக்கு லஞ்சம் கொடுக்க பணம் வேண்டுமாம்…ரிசர்வ் வங்கியிலே கடன் கேட்ட குடியரசு தலைவர் வேட்பாளர்.
நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை போல் உடை அணியும் வழக்கம் கொண்டவர். எந்த தேர்தல் வந்தாலும் அங்கு முதல் ஆளாய் வேட்புமனு தாக்கல் செய்து நூதனமான பிரச்சாரத்தை மேற்கொள்வது ரமேஷின் வழக்கம்.
அதன்படி நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலிலும் முதல் ஆளாய் காந்தி ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள தமக்கு 4 ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடனாக கேட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியில் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்த பணத்தை கொண்டு குடியரசு தலைவராக தன்னை தேர்ந்தெடுக்க உள்ள பிரதமர், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க உள்ளதாகவும் அதற்காக தன்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை வைத்து 4, 809 ரூபாய் வட்டியில்லா கடனாகவோ அல்லது மானியமாக வழங்க வேண்டும் என தெரிவித்து ரிசர்வ் வங்கியில் மனு அளித்துள்ளார்.
ரமேஷின் மனுவை பார்த்த வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மனுவை பெற்று கொண்டு உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியிடம் கோடி கணக்கில் கடன் கேட்ட ரமேஷின் செயல் வைரலாகி வருகிறது.
– Gowtham Natarajan
+ There are no comments
Add yours