OPS vs EPS : “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, குமுறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள். இவர்களின் மோதலால் அதிமுக சின்னம் முடங்கிப் போகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பொறுப்புகளுக்கான தேர்தலை அதிமுக வேறு வழியில்லாமல் தவறவிடுகிறது. உட்கட்சி தகராறால் கட்சியின் செல்வாக்கு குறைவதாக தொண்டர்களும் நிர்வாகிகளும் குமுறி வருகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 500 மேற்பட்ட மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய குழு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களின் வேட்புமனுக்களில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும்.
ஆனால் கட்சியின் நிலவக்கூடிய பிரச்னைகளால் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்திட மறுத்துவிட்டார். மனுக்களில் கையெழுத்திடுமாறு எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியும் அதனை ஓபிஎஸ் நிராகரித்துவிட்டார். இதன் காரணமாக இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் அதிமுக-வினர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுமாறு எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
இப்படி கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலால் சின்னம் முடங்கிப் போவதை கட்சித் தொண்டர்கள் விரும்பவில்லை. “உங்க சண்டையில கட்சி சின்னத்தை தவறவிடலாமா?”, என அதிமுக தொண்டர்கள் குமுறுகிறார்கள்.
– ஆதிரா ஆனந்த்
+ There are no comments
Add yours