காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தின்கீழ் 14 நாட்களில் இவ்ளோ மதுபாட்டில்கள் சேகரிப்பு..!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 3 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை கொடுத்து ₹10 திரும்ப பெறும் திட்டத்தில் கடந்த 14 நாட்களில் 47 ஆயிரம் மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

இதில் 15 முதல் 25 சதவீத கடைகள் மலைப்பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இதில் சில கடைகள் வனத்தையொட்டிய பகுதிகளிலும் உள்ளது. மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசி விட்டோ செல்கின்றனர். இதனால் மலைப்பகுதிகளில் பெருமளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல், மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளாலும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் முக்கியமான சுற்றுலா தலமான ஏற்காட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுபாட்டில்களால் பொதுமக்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, டாஸ்மாக் நிர்வாகம் குடிமகன்கள் வாங்கும் மது பாட்டிலுடன் ₹10 சேர்த்து வசூலித்து, பாட்டிலை மூடியுடன் திருப்பி தந்தால் ₹10 திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தது. அதேநேரத்தில் பாட்டிலை திருப்பித்தராத நிலையில் குடிமகன்களிடம் வசூலிக்கப்பட்ட ₹10 டாஸ்மாக் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஏற்காட்டில் 3 கடைகளில், இந்த திட்டம் கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே, காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் ஏற்காட்டில் உள்ள 3 கடைகளில் கடந்த 14 நாட்களில், மட்டும் 46, 920 பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ”மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை வாங்கும் குடிமகன்களிடம் ₹10 சேர்த்து வசூலிக்கப்பட்டு, காலியான மதுபாட்டிலை திருப்பித் தரும் போது ₹10 திரும்ப கொடுக்கப்படும். ஏற்காட்டில் கோட்டுக்காடு, முண்டகப்பாடி, செம்மநத்தம் ஆகிய 3 இடங்களில் செயல்படும் கடைகளில், இந்த திட்டம் கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 3 கடைகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை (28ம் தேதி) 61 ஆயிரத்து 100 பாட்டில்கள் விற்பனையானது. இதில் 46 ஆயிரத்து 920 பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆரம்பித்த போது, 60 சதவீதம் பேர் பாட்டில்கள் ஒப்படைத்தனர். தற்போது, 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் 100 சதவீதம் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ” என்றனர்.

                                                                                                                          –Naveenraj

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours