அன்னுார்:
தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்லும் அன்னுார் பஸ் ஸ்டாண்ட் அவல நிலையில் உள்ளது.
கோவை– சத்திக்கும், அவிநாசி-மேட்டுப்பாளையத்துக்கும், மையமாக அன்னுார் உள்ளது. அன்னுார் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனர். கர்நாடகா செல்லும் பஸ்கள் உள்பட, 210 பஸ்கள் தினமும் சராசரியாக, 6 முறை அன்னுார் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்கின்றன. பல ஆயிரம் பேர் வந்து சென்றும் பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிக்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். அன்னுார் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் உள்ளே வரும் பகுதியில் பல இடங்களில் சிமென்ட் தரை தளம் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளன. மழை பெய்யும் சமயங்களில் குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் உட்காரும் இருக்கைகள் உடைந்து மோசமான நிலையில் உள்ளன.
பஸ் ஸ்டாண்டில் கோவை செல்லும் பயணிகள் மேற்கூரை இல்லாததால் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் அவதிப்படுகின்றனர். ‘பேரூராட்சி அதிகாரிகள் பஸ்ஸ்டாண்டை துாய்மையாக பராமரிக்கவும், சேதமடைந்த தரைத்தளத்தை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்கள் பஸ்ஸ்டாண்டிற்குள் செல்லாமல் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதை போலீசார் தடைசெய்ய வேண்டும், ‘ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், “கடைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நெடுஞ்சாலை துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பஸ்டாண்டில் தரைதளத்தில் கான்கிரீட் போடவும் துாய்மையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
+ There are no comments
Add yours