“புருஷன் இவரு தான் ஆனா புள்ளைக்கு அப்பா அவரு” – காவல்நிலையத்தில் நிஜமான வடிவேல் காமெடி.!

Estimated read time 1 min read

தூத்துக்குடி:

மனைவியை வேறு ஒரு நபருடன் சேர்த்து வைத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரின் கணவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் அர்ஜூன் மற்றும் வைகை புயல் வடிவேலு நடித்த மருதமலை படத்தில் வரும் காவல்நிலைய காமேடி பலருக்கும் நினைவில் இருக்கும். அந்த காமேடியில் நடிகர் வடிவேலு சீட்டு குலுக்கி போட்டு பெண் ஒருவருக்கு எந்த கணவர் என்பதை தேர்வு செய்து வழி அனுப்பி வைப்பார். அந்த காமெடியை மிஞ்சும் அளவுக்கு நிஜ சம்பவம் ஒன்று தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி முத்து. தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வரும் இவர் அதே பகுதியை சேர்ந்த ஞானதீபம் என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். புதுமண தம்பதிகளாக வாழ்கையை தொடங்கிய இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கர்பிணியாக இருந்த ஞானதீபம் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணி முத்து, தனது மனைவியை காணவில்லை எனவும் அவர் 4 மாதம் கர்பிணியாக உள்ளதாகவும், அவரை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும் எனவும் கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஞானதீபத்தை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஞானதீபம் அவருடைய முன்னாள் காதலருடன் காவல் நிலையம் வந்திருப்பதாக போலீஸார் அந்தோணி முத்துவுக்கு போஃன் மூலம் அழைப்பு விடுத்து தகவல் அளித்துள்ளனர். இதனை அறிந்த அந்தோணி முத்து, அவரது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஞானதீபம் ஏற்கனவே திருமணம் ஆன பிரதீப் என்ற நபருடன் இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தோணி முத்து, போலீஸாரிடம் விசாரித்துள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் ஜெயசீலன் என்பவர் ஞானதீபத்தின் கர்பத்திற்கு  பிரதீப்தான் காரணம் எனவும் அவர் மேஜர் என்பதால் ஞானதீபத்தை பிரதீப்புடன் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த  அந்தோணி முத்து மற்றும் அவரது உறவினர்கள் காவல் ஆய்வாளர் ஜெயசீலனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கை கலப்பில்  அந்தோணி முத்துவின் தந்தையை காவலர் ஜெயசீலன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி முத்து தனது மனைவியை வேறு ஒரு நபருடன் சேர்த்து வைத்தது மட்டுமின்றி தனது தந்தையையும் தாக்கிய காவல் ஆய்வாளர் மற்றும்  ஞானதீபம், பிரதீப் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அவருடன் பிரதீப்பின் மனைவியும் தனது கணவரை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– Dayana Rosilin

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours