ஆத்தூர்:
ஆத்தூர் பேட்டை பகுதியில் சேலம்-கடலூர் சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையில் நிர்வாக அதிகாரி, அங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், போலியான விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளதாகவும் உழவர் சந்தை விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த புகார்களை கூறி, நிர்வாக அலுவலரை கண்டித்து ஆத்தூர் உழவர் சந்தை விவசாயிகள், சேலம்-கடலூர் சாலையில் நேற்று காலை 7. 30 மணி அளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை:
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், உழவர் சந்தை நிர்வாக அதிகாரி சின்னதுரை, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என தாசில்தார் கூறி விவசாயிகளை சமாதானப்படுத்தி காய்கறிகளை விற்பனை செய்ய அனுப்பி வைத்தார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
–
+ There are no comments
Add yours