சேலம்:
இந்திய மாணவர் சங்கம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை நேற்று முற்றுகையிட திட்டமிட்டனர். இதற்காக அவர்கள், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தொடங்கி ரெயில் நிலையம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர்.
மாவட்ட தலைவர் பவித்திரன் தலைமையில் மாநில தலைவர் கண்ணன் உள்பட சங்க நிர்வாகிகள் ஜங்ஷன் நுழைவுவாயில் முன்பு வந்தனர். அப்போது அங்கு சேலம் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
மறியலுக்கு முயற்சி
அப்போது ஊர்வலமாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் தடுப்புகளை தாண்டி ரெயில் மறியல் செய்ய முற்பட்டனர். இதையடுத்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீசார், இந்திய மாணவர் சங்கத்தினரை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ரெயில் மறியல் செய்ய முற்பட்ட 19 பேரை போலீசார் கைது செய்து சூரமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர்.
-Naveenraj
+ There are no comments
Add yours