தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை நடுக்கடலில் வீசி சென்ற மர்ம கும்பல்.
தூத்துக்குடியில் இருந்து இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கியூ பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் மற்றும் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசை பார்த்ததும் கடற்கரையில் இருந்த ஒரு படகு வேகமாக கடலுக்குள் புறப்பட்டு சென்றது. இதைத் தொடர்ந்து போலீசார் மீனவர்களின் உதவியுடன் மற்றொரு படகில் கடலுக்குள் சென்ற படகை விரட்டி சென்றனர்.
அப்போது அந்த படகில் இருந்தவர்கள் மறைத்து வைத்து இருந்த மூட்டைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டனர். பின்னர் கடலில் மிதந்து வந்த மூட்டைகளை போலீசார் சேகரித்தனர். மொத்தம் 38 மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ஒவ்வொரு மூட்டையிலும் சுமார் 45 கிலோ எடை கொண்ட பீடிஇலைகள் இருந்தன.
மொத்தம் 1,700 கிலோ பீடி இலைகள் இருந்தன. இலங்கையில் இதன் மதிப்பு சுமார் 17 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதனையடுத்து பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நடுக்கடலில் பீடி இலை மூட்டைகளை வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
– Gowtham Natarajan
+ There are no comments
Add yours