அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் பாதுகாப்பு தொடர்பாக OPS, EPS தரப்பு தனித்தனியாக மனு..!

Estimated read time 1 min read

சென்னை:

OPS EPS Filled Petitions : வரும் 23ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அன்றைய தினம் பாதுகாப்பு வழங்க கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது தரப்பிலும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம் பூகம்பத்தை கிளப்பியுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்து வருகின்றனர். எத்தனை மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பக்கம் இருக்கிறார்கள் என பலத்த போட்டி ஏற்பட்டுள்ள சூழ்நிலை தற்போது அதிமுகவில் நிலவி வருகிறது. பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூடுகிறது. இதில் ஒற்றைத் தலைமைப் பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனிடையே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இடையூறு ஏற்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை வானகரத்தில் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு பாபாதுகாப்பு வழங்கக் கோரி முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  பொதுக்குழு மற்றும் செயற்குழு  கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், 65 எம்.எல்.ஏ.க்கள், 5 எம்.பி.,க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக உள்ள 2,500 பேர் இக்கூட்டங்களில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான உள்ளரங்கில் கூட்டம் நடத்தப்படுவதால் அனுமதி பெற தேவையில்லை என்றாலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதால், பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அவசியம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு அளிக்கக்கோரி  டி.ஜி.பி. மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 7ம் தேதி மனு அளித்ததாக பெஞ்சமின் கூறியுள்ளார்.

அந்த மனு மீது முடிவு எதுவும் எடுக்காததால் மீண்டும் கடந்த 15ம் தேதி மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனாலும் காலம் தாழ்த்துவதாகவும் பெஞ்சமின் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் வரும் 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு டி.ஜி.பி., ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதி சதீஷ்குமாரிடம், பெஞ்சமின் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை  புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக கருதப்படும் பெஞ்சமின் தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யயட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பிலும் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் அந்த மனுவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அளித்துள்ளது. அதில், வானகரத்தில் நடைபெற உள்ள பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அதிமுகவின் பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான இந்த சூழ்நிலையில், பொதுக்குழுவை தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த புகார் மனுவை ஓபிஎஸ் தரப்பு சார்பாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அளித்துள்ளளார். இருதரப்பிலும் மாறிமாறி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதால் 23ம் தேதி வானகரத்தில் என்ன நடைபெறுமோ என பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

                                                                                                               – நவீன் டேரியஸ்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours