10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்…! தமிழில் ஒருவர் மட்டும்தான் 100/100

Estimated read time 1 min read

இன்று வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் ஒருவர் மட்டுமே 100/100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் பொதுத்தேர்வு நடக்காமல் இருந்தது. தற்போது கொரோனா சற்று ஓய்ந்ததை அடுத்து 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வானது இந்த ஆண்டு நடந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 12 ஆயிரத்து 620பேர் எழுதினர்.

அதேபோல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து ஆறாயிரத்து 277 பேர் எழுதினர். இந்தச் சூழலில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

இதில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி 90.07 சதவீதமாகவும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 93.76ஆகவும் இருக்கிறது. மாணவர்களைவிடவும் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதாவது 10ஆம் வகுப்பு தேர்ச்சியில் மாணவிகள் 5 சதவீதமும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 8 சதவீதமும் மாணவர்களைவிட அதிகம் இருக்கின்றனர்.
இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் மொழிப்பாடமான தமிழில் ஒருவர் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். அதேபோல், அரசுப் பள்ளிகள் 85 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்தவரை அரசுப் பள்ளிகள் 89.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.2 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் 92.3ஆக இருந்தது.

கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தற்போதைய பொதுத்தேர்வில் 10ஆம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                       – க. விக்ரம் 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours