திருவாரூர்:
திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான 5 நாட்களில் மருமகனை மாமனாரே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றரசன். இவரது மகன் முத்தரசன். நிரந்தரமான வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், முத்தரசனுக்கு மங்களநாயகிபுரம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் அரவிந்தியா(25) என்ற பெண்ணுடன் கடந்த 13-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே, நேற்று முத்தரசன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு விருந்திற்கு வந்துள்ளார். அப்போது முத்தரசன் மது அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
முத்தரசன் திருமணத்திற்கு முன்பே குடிபோதையில் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகள் அரவிந்தியா ஆகியோரிடம் தகராறு செய்து ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதே போல் அட்டகாசத்தில் ஈடுபட அது மாமனாருக்கு ஆத்திரத்தை வரவழைத்திருக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் வெளியே முத்தரசன் நின்று கொண்டு போதையில் சத்தம் போட்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த ரவிச்சந்திரன் தனது மருமகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.
அதில், சம்பவ இடத்திலேயே முத்தரசன் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பியோடிய ரவிசந்திரன் தலைமறைவாகியுள்ளார்.இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்தரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தனது மருமகனை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக கூறி ரவிச்சந்திரன் போலீசில் சரணடைந்துள்ளார். பின்னர், ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 நாட்களில் புது மாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– Gowtham Natarajan
+ There are no comments
Add yours