பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் என வீட்டு வாடகை புரோக்கர் ஒருவர் தேனியில் ஒட்டிய போஸ்டர்கள் திகிலை கிளப்பியுள்ளன.
ஒரு மனிதருக்கு வீடு அத்தியாவசியம். பலருக்கு சொந்த வீடு கனவு இருந்தாலும் பெரும்பாலும் வாடகை வீட்டில் வசிக்கும் நிலையே உருவாகிறது. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பிடித்துக்கொடுக்க புரோக்கர்கள் இருக்கிறார்கள்.
ஒரு மாத வாடகை கமிஷனாக வாங்குவது, இல்லை குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வாங்கிக்கொள்வது என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்டண முறை இருக்கிறது.
தற்போது வீடு பிடித்துக்கொடுக்கும் புரோக்கர்கள் விளம்பரப்படுத்திக்கொள்வதிலும் மும்முரமாக இருக்கின்றனர். அப்படி விசிட்டிங் கார்டு கொடுப்பது உள்ளிட்ட செயல்களை அவர்கள் செய்துவருகின்றனர். ஆனால் தேனியில் வீடு புரோக்கர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் விசித்திரமாகவும், திகிலாகவும் இருக்கிறது.
தேனியில் ஸ்ரீ கௌமாரியம்மன் ரியல் எஸ்டேட் நடத்திவருபவர் ஜெய்முருகேஷ். இவர் வீடு புரோக்கராகவும் தொழில் செய்துவருகிறார். இவர் அடித்துள்ள போஸ்டரில், “வாடகை வீடு, ஒத்தி வீடு ஒரு மணி நேரத்தில் அமைத்துத் தரப்படும்.
வாடகை வீடு, ஒத்தி வீடு பார்ப்பதற்கு சர்வீஸ் சார்ஜ் கிடையாது. பேய் வீடுகளுக்கு கமிஷன் முற்றிலும் இலவசம்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.
தேனியில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்தப் போஸ்டர்களை பார்த்தவர்கள் உடனடியாக இதுகுறித்து காவல் துறையிடம் புகார் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் ஜெய்முருகேஷை அழைத்து போஸ்டர்களை கிழிக்கும்படு காவல் துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர் போஸ்டர்களை கிழித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜெய்முருகேஷ் கூறுகையில், “தூக்குபோட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டவர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை.
இதனால் எங்களை போன்றவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவேதான் பொதுமக்களை கவர இதுபோன்று போஸ்டர் ஒட்டினேன்” என்றார்.
– க. விக்ரம்
+ There are no comments
Add yours