ஆன்லைன் ரம்மியால் சென்னையில் மற்றொரு தற்கொலை..! – தொடரும் அவலம்.!! முற்றுப்புள்ளி எப்பொழுது.?

Estimated read time 1 min read

சென்னை:

Online Rummy Game : ஆன்லைன் ரம்மி விபரீத விளையாட்டால் இதுவரை 20க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்ந்துவிட்டன. தற்போது சென்னை மணலியில் மேலும் ஒருவர் தற்கொலை. என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு இன்னும் எத்தனைக் குடும்பங்கள் பலியாகப் போகின்றனவோ. இந்த அபாயகரமான விளையாட்டுக்கு எத்தனை குடும்பங்கள் இதுவரை பலியாகி இருக்கின்றன என்று திரும்பிப் பார்த்தால், இதன் விபரீதம் புரியும். அத்தனைப் பேரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 6ம் தேதி முதல்முறையாக ஒரு பெண்ணை காவு வாங்கியிருக்கிறது இந்த விளையாட்டு. சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி இந்த விளையாட்டுக்கு அடிமையாகி நகை மற்றும் பணத்தை இழந்து மன உளைச்சலில் திளைத்து தற்கொலை செய்துகொண்டார். அந்தச் சம்பவத்தின் சூடே இன்னும் தணியாமல் ஆன்லைன் ரம்மி விவகாரம் விவாதமாகி வரும்நிலையில், தற்போது மற்றொரு உயிர்ப்பலி நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அதே மணலியில்.!

சென்னை அடுத்த மணலி பகுதியில் அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் வேலை செய்து வந்துள்ளார்.  இவருக்கு  திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக பெருமாள் ஆன்லைனில் ரம்மி விளையாடி, அதிக பணத்தை இழந்து கடன் சுமையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.  கிட்டத்தட்ட 20 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணத்தை பெருமாள் இந்த விளையாட்டில் இழந்துள்ளார்.

இதனை வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வந்துள்ளார். இதன் காரணமாக பெருமாளுக்கும் அவரது  மனைவி வரலட்சுமிக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பெருமாள் தான் பயன்படுதி வந்த செல்போனை அடகு வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவரிடம் வழக்கம்போல் சண்டையிட்டுள்ளார். அதன்பின் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். அதிகாலை எழுந்து பார்த்த போது பெருமாள் அவரது அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வரலட்சுமி செய்வதறியாது திகைத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக மணலி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இறந்த நபரின்  மனைவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக குடும்பங்களை அழிக்கும் இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் முதல் எதிர்க்கட்சிகள் வரை பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே தமிழக சட்டசபையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்ததால், மீண்டும் மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி என்ற விஷம் பரவ தொடங்கிவிட்டது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்பட தற்போது அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். செய்யுமா தமிழக அரசு.?

                                                                                                                            – நவீன் டேரியஸ்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours