அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்: இருவர் படுகாயம்..!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவர் படுகாயமடைந்தனர். சாலையில் 2, 000 இளநீர் காய்கள் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வியாழக்கிழமை இரவு பொள்ளாச்சியில் இருந்து 2, 000 இளநீர் காய்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்த லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை 2. 30 மணியளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 2, 000 இளநீர்க் காய்களும் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பெருந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற சிமெண்ட் பல்கர் லாரி விபத்து நடந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற சொகுசுப் பேருந்து, பல்கர் லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சொகுசு பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

ஆனால், இளநீர் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் விழுப்புரம் மாவட்டம் அனுபந்தம் பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறிக் கிடந்த இளநீர் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

                                                                                                                            -Naveenraj

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours