ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யக்கோரி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11ம் தேதி ஆளுனர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதே போல தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரனும் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நளினி தடா சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் அசல் தீர்ப்பு சமர்ப்பிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது.
பின்னர், நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என தெரிவித்தார். அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் எனவும், இரண்டரை ஆண்டுகள் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் தெரிவிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் இந்த விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அதற்கு உச்ச நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிடதான் கோருவதாகவும், அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். குடியரசு தலைவர் இதுவரை ஆவணங்களை ஆளுநருக்கு அனுப்பவில்லை எனவும், அனுப்பினாலும் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பதால் நளினியை விடுதலை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரைத்ததாகவும் குறிப்பிட்டார். ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளதாக கூறிய அவர், விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நளினி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
– Dayana Rosilin
+ There are no comments
Add yours