மைசூரு:
ஆசியாவில் நீண்ட தந்தங்கள் கொண்ட யானைகளில் ஒன்றான போகேஸ்வர் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற காட்டு யானை வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தது.
மைசூரு நாகரஹொளே மற்றும் பண்டிப்பூர் புலிகள் காப்பகம் கர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும். இப்பகுதியில் சுற்றித்திரியும் பெரும்பாலான காட்டு யானைகள் கபினி அணைக்கு தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அப்படி வரும் காட்டு யானை கூட்டத்தில் போகேஸ்வரருக்கு தனி சிறப்பும் மதிப்பும் உண்டு. 69 வயதை கடந்த ஆண் யானை போகேஸ்வரருக்கு 2.58 மீட்டர் நீளத்துக்கு தந்தம் கொண்டது. ஆசியாவில் மிகப்பெரிய தந்தம் கொண்ட யானைகளில் போகேஸ்வர் யானையும் ஒன்று. கம்பீரமான தோற்றம் ; அழகான தந்தம் என போகேஸ்வரரை வர்ணித்துக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் ஜூன்13 ஆம் தேதி காலை வனத்துறையினர் காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட குண்டாரே பகுதியில், போகேஸ்வர் மண்ணில் சரிந்து கிடப்பதை பார்த்தனர். அருகே சென்று பார்த்த போது இறந்து கிடந்ததை பார்த்தனர். இது குறித்து, உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களுடன் வந்து சேர்ந்தனர். சம்பவ இடத்திலேயே போகேஸ்வருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், யானைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இயற்கையாக இறந்தது தெரிய வந்தது.
பின்னர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றம் துறை விதிகள் படி போகேஸ்வர் யானையின் தந்தம் அகற்றப்பட்டு ஆய்வுக்கு மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டது. வனத்துறையின் விதிமுறைகள் படி வனப்பகுதியில் இறந்த யானையின் உடல் அதே பகுதியில் உள்ள கழுகுகளுக்கு உணவுக்காக விடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours