அதிமுகவில் முற்றும் மோதல்: ஓ.பி.எஸ். ஆதரவு போஸ்டர்களை கிழித்தெரிந்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்..!

Estimated read time 1 min read

சென்னை:

ஒற்றைத் தலைமை சர்ச்சை:

அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி கூட உள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே கட்சிக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும் என இருவரது ஆதரவாளர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்குவந்த இருதரப்பு நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பொதுக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான்கரை மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் ஆரோக்கியமான முறையில் பல்வேறு கருத்துகளை விவாதித்ததாக கூறினார். மேலும், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பெரும்பாலான தலைமைக் கழக நிர்வாகிகள் , மாவட்டச் செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். கட்சிக்கு யார் தலைமை என்பது குறித்து வரும் நாட்களில் கட்சிதான் முடிவு செய்யும் என்றும், கட்சியில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வர முடியும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பிஎஸ் இருந்தாலும், கட்சியின் முழுக்கட்டுபாடும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி அணியினர் எடுத்து விடுகிறார்களாம். முடிவு எடுப்பது குறித்து ஒ.பிஎஸ்ஸிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. கட்சியின் நிலைப்பாடு இதுதான் என்பது மட்டும் ஒபிஎஸ்க்கு தெரிவிக்கப்படுகிறதாம். இதனால் அதிருப்தியில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது அதிரடி மோடுக்கு சென்றுள்ளனர்.

ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டர்களால் கலகம்:

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டை பகுதியில் “தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே!” என ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோன்று “அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வணங்குகிறோம், அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் ஒற்றைத் தலைமையே, எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு பின் மூன்றாவது தலைமையே” என பல வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை தேனி முழுவதும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரவோடு இரவாக ஒட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் பகுதியில், “தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமையே. அம்மா அவர்களின் அரசியல் வாரிசு. ஐயா ஓபிஎஸ் அவர்களே கழகத்தை தலைமை ஏற்று வழிநடத்த வாருங்கள்” எனும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களில் “அஇஅதிமுக ராமநாதபுரம் மாவட்ட உண்மை தொண்டர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தனித்தனியாக ஆலோசனை:

இந்த பரப்பான சூழலில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோர் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன்,  முன்னாள் வேளச்சேரி எம்எல்ஏ அசோக், வழிகாட்டு குழு உறுப்பினரும், முன்னாள்  எம்பியுமான கோபாலகிருஷ்ணன், புதிய எம்பியாக தேர்வாகியுள்ள தர்மர், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் முகமது சையத் கான், நெல்லை மாநாகர் மாவட்ட செயலாளர் கணேஷ ராஜா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அதேபகுதியில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர்
பங்கேற்றுள்ளனர். எடப்பாடி பழனிசாமியுடனாக ஆலோசனைக்கு பிறகு திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிவருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் பன்னீர் செல்வத்தை சமாதனப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

ஓ.பி.எஸ் ஆதரவு போஸ்டர் கிழிப்பு:

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் வீட்டின் எதிரே ஒட்டப்பட்டிருந்த ஆதரவு போஸ்டர்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கிழித்தெரிந்தனர். இதனால் ஆவேசமடைந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இடையிலான இந்த மோதலால் அதிமுக மூன்றாம் முறையாக பிளவுபடுமோ எனும் அச்சம் அக்கட்சியின் தொண்டர்களிடையே மேலோங்கியுள்ளது.

                                                                                                                      – Arunachalam Parthiban

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours