ஒபிஎஸ்ஸூக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன்! – பரபரக்கும் ஆலோசனைகள்..!

Estimated read time 1 min read

சென்னை:

அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் எடப்பாடி பழனிசாமியின் பெயரை பொதுச்செயலாளருக்கு ஓ.பிஎஸ் முன்மொழிய வேண்டும் என இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அதிமுகவில் மீண்டும் குழப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவருக்கும் ஆதரவு இருந்தாலும், பெரும்பான்மை நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத் தான் இருக்கிறதாம்.

அதிமுகவின் முக்கியத் தலைவர்களும் ஒற்றைத் தலைமையின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், அந்த ஒற்றைத் தலைமை யார்? என்பது தான் அதிமுகவில் நீடிக்கும் குழப்பத்துக்கு காரணம். ஒருங்கிணைப்பாளராக ஓ.பிஎஸ் இருந்தாலும், கட்சியின் முழுக்கட்டுபாடும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி அணியினர் எடுத்து விடுகிறார்களாம். முடிவு எடுப்பது குறித்து ஒ.பிஎஸ்ஸிடம் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. கட்சியின் நிலைப்பாடு இதுதான் என்பது மட்டும் ஒபிஎஸ்க்கு தெரிவிக்கப்படுகிறதாம்.

இது குறித்து ஏற்கனவே ஒபிஎஸ் தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாக பேசியுள்ளார். அதனால், அவர் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் தன்னுடைய முடிவை திட்டவட்டமாக கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய பேச்சுக்கு உரிய முக்கியத்துவம் கட்சிக்குள் இல்லாததால் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு கடும் அதிருப்தியில் இருக்கிறார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கட்சிக்குள் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்றிரவு தனியே ஆலோசனையிலும் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.பி.உதயக்குமார், மணிகண்டன், வைத்தியலிங்கம், எம்.சி.சம்பத், காமராஜ் மற்றும் ஜேடிசி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அதேநேரத்தில் இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் என இது குறித்து ஆலோசனை நடத்தி தங்களுடைய முடிவை ஒ.பிஎஸ் தரப்புக்கு தெரிவித்துவிட்டார்களாம். ஒபிஎஸ் தரப்பு தங்களின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இபிஎஸ் தரப்பு முடிவெடுத்துவிட்டது. அதாவது, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளருக்கு, ஒ.பன்னீர்செல்வம் முன்மொழியாவிட்டால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் ஒ.பி.எஸ் தரப்பு நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்கப்படாது என்பதையும் மறைமுகமாக தெரிவித்துவிட்டார்களாம். ஓ.பி.ரவீந்திரநாத்துக்கும் எம்.பி தேர்தலில் சீட் கொடுக்கப்படக்கூடாது என்பது இ.பி.எஸ் தரப்பின் இப்போதைய முடிவாம்.

இப்போதைய சூழலில் இபிஎஸ் கையே கட்சிக்குள் ஓங்கியிருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் எத்தகைய முடிவை எடுக்கப்போகிறார் என்பதும் மர்மமாக உள்ளது. கடந்த காலங்களில் ஓ.பிஎஸ் பின்னால் சென்றவர்களுக்கு முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதால், அதனையும் கட்சி நிர்வாகிகள் கவனத்தில் கொண்டுள்ளனர். இதனால், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை அதிமுகவினர் எதிர்நோக்கியுள்ளனர்.

                                                                                                                              – S.Karthikeyan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours