கிறிஸ்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்துக : எதிர்க்கட்சிகளுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்..!

Estimated read time 1 min read

President Election : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து 15-வது புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜுலை 18-ம் தேதி நடைபெறுகிறது. பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிரமாக யோசித்து வருகின்றன.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை . இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறித்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும், நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை .

தற்போதைய மோடி  அமைச்சரவையில் கிறித்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது. அதைப் பலரும் சுட்டிக் காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறிஸ்துவ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றங்களிலும் போதுமான பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2% , கிறித்தவர் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4% மட்டுமே  உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால்  இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும்.

கடந்த எட்டாண்டு கால பாஜக ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறிஸ்தவர்களும்  குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு எவ்வித ஆதாரமும் இன்றி கிறிஸ்தவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். மேலும், சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களால் கிறிஸ்தவர்கள், குறிப்பாக பாதிரியார்கள் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆங்காங்கே தனித்தியங்கும் சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்கள், ஜெபக்கூடங்கள் காவல்துறையினரின் ஒத்துழைப்போடு தகர்க்கப்படுகின்றன.

இந்தியாவின் கல்வி, சுகாதாரம்,  பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கிறித்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மகத்தானது.  2011-ம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடி ஆகும்.  இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட ஒரு சமூகம் இப்படி புறக்கணிக்கப்படுவதும், தாக்குதலுக்குள்ளாவதும் இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகாது. இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இந்நேரத்தில் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும்.

பெரும்பான்மைவாத அடிப்படையில் இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தும் பாஜக,  குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்தில்தான் பயன்படுத்தும்.  எனவே, எதிர்க்கட்சிகள்  தமது பொது வேட்பாளராகக் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறிஸ்துவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும், வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும்  அமையுமென்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது எனக் கூறியுள்ளார்.

                                                                                                                           – Chithira Rekha 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours