கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாக மாற்ற விவகாரம் : ஓபிஎஸ் கண்டனம்..!

Estimated read time 1 min read

கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாகத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றியதை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகமாக வசிக்கும் பிரமலை கள்ளர் வகுப்பினரின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தும் வகையிலும், அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டும், கிட்டத்தட்ட 27,000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த மூன்று மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுடனான விடுதிகளின் நிர்வாகத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 295 பள்ளிகள் மற்றும் 54 விடுதிகள் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களின் நிர்வாகத்தின்கீழ் இதுவரை இயங்கி வந்தன. தற்போது, கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் கட்டடங்கள் பராமரிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியரின் கல்வி நலன் ஆகியவற்றை ஆய்வு செய்ய கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரால் இயலவில்லை என்றும், அதே சமயத்தில் கள்ளர் சீரமைப்பு விடுதிகளைத் தவிர, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்வது, கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவது போன்ற பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதாகவும், எனவே கள்ளர் சீரமைப்பு விடுதிகளை அவை செயல்படும் மாவட்டங்களிலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் நிர்வகிக்கலாம் என்றும், இவ்விடுதிகளின் மேற்பார்வை, நிர்வாகம், விடுதிகளில் பணிபுரிவோரின் பணிமாறுதல் போன்றவற்றை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்தின் மூலம் மேற்கொள்ளலாம் என்று முடிவு எடுத்து, அதன் அடிப்படையில், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் பணியமைப்பினை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககத்தின் நேரடிப் மேற்பார்வையில் மேற்கொள்ளவும், இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதிகள் நிர்வாகத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றம் செய்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகிய இரண்டும் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஒவ்வொரு விடுதியும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும்; விடுதிக் காப்பாளர், அங்கு பணிபுரியும் காவலர், சமையலர் போன்றோருக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்பு இருந்ததாகவும் அப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக தலைமை ஆசிரியரின் கண்காணிப்பில் மாணவ, மாணவியர் இருக்க இயலாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதன்மூலம் மாணவர்களின் கவனம் சிதறி அவர்கள் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடக்கூடிய நிலை உருவாகும் என்றும் தலைமை ஆசிரியர்களும், அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, மாணவ, மாணவியரின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

                                                                                                                                               -Laxman

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours