திருச்செந்தூர் விசாகத் திருவிழா..! இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கோலாகலம்..!!

Estimated read time 1 min read

திருச்செந்தூர்:

வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாள். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் விசாகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து குவிந்தனர்.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகம் இன்று நடக்கிறது. வைகாசி மாத விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடந்தது.

விசாக திருநாளான இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்பத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

நாளை ஜூன் 13-ம் தேதி(திங்கள் கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபரதனையும், இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகமும் நடக்கிறது.

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூரில் குவிந்தனர். முருகரை தரிசித்துவிட்டு கடலில் புனித நீராடுவதற்காக கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

                                                                                                                 – Malathi Tamilselvan

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours