ஜூன் 14 கோவை டூ சீரடிக்கு தனியார் ரெயில் இயக்கம்! – சு.வெங்கடேஷன் கண்டனம்

Estimated read time 1 min read

கோவை:

வரும் ஜூன் 14 மாலை 6 மணியளவில் வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான டிக்கெட் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டு தற்போது முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

இதுபோன்று இந்தியாவின் 5 பெரு நகரங்களில் இருந்து இந்த சீரடி கோயிலுக்கு செல்லும் ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஜூன் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது.

ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம்! ரயில் தண்டவாளம், சிக்னல், நடைமேடை ரயில்வேக்கு சொந்தம்! ரயில்வே டிரைவர் காட் வண்டியை இயக்குவார்கள், ஆனால் டிக்கெட் விற்பனை , பயணிகளை பரிசோதிப்பது ஆகிய அனைத்தும் அதாவது வருமானம் மட்டும் தனியாருக்கு!

இயக்கம் ரயில்வே உடையது! டிக்கெட் விற்பனை தனியாருக்கு! கட்டணம் அவர்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ள அனுமதி, சீரடிக்கு செல்ல விரும்பும் பக்தர்களை சுரண்டும் நடவடிக்கை.

கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1458 கிலோமீட்டர்  தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாய். ஆனால் அவர்கள் வசூலிப்பது 2500 ரூபாய். மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2,360 . தனியார் கட்டணம் ரூபாய் 5000.

குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் 4,820 ரூபாய். ஆனால், தனியார் கட்டணம் 7000 ரூபாய். குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190.

தனியார் கட்டணம் ரூ.10000. அதாவது ஸ்லீப்பர் கட்டணம் ரெண்டு மடங்கு, குளிர்சாதன படுக்கை மூன்றடுக்கு இரண்டடுக்கு ஆகியவை ஒன்னரை மடங்கு, முதல் வகுப்பு ஒண்ணேகால் மடங்கு  கட்டணக் கொள்ளை.

தனியாருக்கு உரிமை கட்டணம் முன்பு 40 லட்சம் என்று தீர்மானித்து பின்னர் அதிலும் பதினோரு லட்சம் குறைத்து வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா? நாங்கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம்.

ரயில்வே அமைச்சர் அண்மையில் சென்னை வந்தபோது ரயில்வேயில் தனியார் மயம் கிடையாது என்று அடித்து சொன்னார். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தனியார் ரயில் என்றால் ஒரு கட்டண சலுகையும் கிடையாது. ஏன், முதியோர் கட்டண சலுகையும் கிடையாது. அது மட்டுமல்ல, ரயில்வேயை போல ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு. இதுதான் தனியார் மயம்.”

என ரயில்கள் தனியார்மயம் ஆக்கப்படுவதை வன்மையாக கண்டித்து அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

                                                                                                                      – Geetha Sathya Narayanan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours