கர்நாடக:
கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம் காகுன்டி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்குத் தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.
பின்னர், ஷாலினியின் காதலனின் பெற்றோர் பெண் கேட்டுச் சென்றபோது இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றுள்ளது. இதையடுத்து ஷாலினிக்கு 18 வயது ஆகாததால் அவரால் திருமணம் செய்துகொள்ள முடியாது என போலிஸார் தெரிவித்து இரு குடும்பத்தையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், ஷாலினி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனைத் அறிந்து கொண்ட அவரின் பெற்றோர் கடந்த 6ஆம் தேதி இரவு ஷாலினியை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். பிறகு அவரது உடலைக் குப்பைத்தொட்டியில் வீசியுள்ளனர்.
இதன்பிறகு ஷாலினியின் தந்தை சுரேஷ் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார். பின்னர் போலிஸார் சாலினி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஷாலினியின் தந்தையை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியலின வாலிபரை காதலித்ததால் மகளை பெற்றோரே கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-Pradeep
+ There are no comments
Add yours