சென்னை:
Chennai High Court Dawali : சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் தபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார். தபேதாராரின் பணிகள் என்னென்ன ?
நீதிபதிகள் தனது அறையிலிருந்து (chamber) நீதிமன்ற அறைக்கு (court hall) வரும்போதும், மீண்டும் நீதிமன்ற ஹாலில் இருந்து சேம்பருக்குத் திரும்பும் போதும் டவாலிகளும் கூடவே வருவர். இத்தகைய டவாலிகள் நீதிபதிகள் எளிதாக சென்று திரும்பும் வகையில் வழி ஏற்படுத்தித் தருவர். நீதிபதிகளுக்கு சில அடிகள் முன்னர் தங்களது செங்கோலை ஏந்தியபடி “உஷ்” “உஷ்” என்று சத்தமிட்டபடி டவாலிகள் செல்வர். “உஷ்” என்று இவர்கள் சத்தமிட்டால் நீதிபதி வருகிறார் என மற்றவர்கள் புரிந்து கொண்டு நீதிபதிகளுக்கு வழியை விடுவார்கள்.
அவ்வாறு நீதிபதிகள் வரும் போது வழிவிடும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் வழக்கறிஞர்கள், அலுவலர்கள்,வழக்காடிகள், வராண்டாக்களில் சுவரின் ஓரமாக நின்று சம்மந்தப்பட்ட நீதிபதிக்கு வணக்கம் சொல்வது மரபு.
அதே போல இந்த செங்கோல் நீதிபதியின் சேம்பர் முன் வைக்கப்பட்டிருந்தால், நீதியரசர் உள்ளே இருக்கிறார் என்று பொருள். செங்கோல் வைக்கப்படவில்லை என்றால் நீதிபதி சேம்பரில் இல்லை என்று அர்த்தம். டவாலிகள் காலை 10.30 மணிக்கு நீதிபதிகளை சேம்பரில் இருந்து அழைத்து வந்து நீதிமன்ற அறைக்குள் விட்ட பிறகு வழக்கு விசாரணையின் போது கோர்ட் ஹால் உள்ளேயே காந்திருப்பார்கள்.
மதிய இடைவேளையான பிற்பகல் 1.30 மணியளவில் நீதிபதிகள் உணவருந்த செல்லும் போது உடன் சென்று மீண்டும் நீதிமன்ற விசாரணை நேரம் ஆரம்பிக்கும் 2.15 மணிக்கு நீதிபதிகளை அழைத்து வருவார்கள். மாலை 4.45 மணிக்கு நீதிமன்ற விசாரணை நேரம் முடிந்த பின் வழக்கம் போல் நீதிபதிகளை நீதிமன்ற அறையிலிருந்து அவர்களது சேம்பருக்குள் அழைத்து செல்வார்கள்.
ஆண் தபேதார்கள் சீருடையாக வெள்ளை நிற பேண்ட், சட்டை, தலையில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட டர்பனும், இடுப்பில் பட்டையும் அணிந்திருப்பார்கள். பெண் தபேதாரின் சீருடையாக சல்வார் கமீஸ், துப்பட்டா, தலைக்கு சிவப்பு நிற அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட டர்பன், இடுப்பு பட்டை வழங்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பெண் தபேதார் பெண் நீதிபதி மஞ்சுளா அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் பெண் ஓட்டுனர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது வரலாற்றில் முதன் முறையாக பெண் தபேதாரும் நியமிக்கப்பட்டுள்ளது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
– நவீன் டேரியஸ்
+ There are no comments
Add yours