தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. இதற்கென தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காரணமாக வரும் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என பள்ளிகல்வித்துறை அண்மையில் அறிவித்தது. இந்த வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பை திரும்பப் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கையினை ஏற்று, இந்த வகுப்புகள் அரசுப்பள்ளியிலேயே தொடர்ந்து நடைபெறும் எனவும், இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது.
– Chithira Rekha
+ There are no comments
Add yours