FreeFire ID, Password-ஐ திருடிய நண்பர்கள் – WhatsAppல் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை..!

Estimated read time 1 min read

கரூர்:

கரூர் அருகே ஃப்ரீ பயர் கேம் விளையாட்டு செயலியின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை நண்பர்கள் திருடியதால் விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அடுத்த தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவர் மகன் சஞ்சய் (23). இவர் தந்தை ராஜலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக தாயை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தாய் சத்யபாமாவுடன் சஞ்சய் வசித்து வந்தார்.

கேட்டரிங் படித்து முடித்துள்ள இவர் வருமை காரணமாக தாய்  மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் வேலைக்கு சஞ்சய் சென்று வந்துள்ளார். ஆனால், சமீப காலமாக இதுபோன்ற வேலைகளுக்கும் சஞ்சய் செல்லாததால் அவரது தாய் அடிக்கடி கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த சஞ்சய் நேற்று (ஜூன் 6ம் தேதி) மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இது ஒருபுறம் இருக்க உயிரிழந்த சஞ்சய் ஆன்லைனில் ரம்மி, ஃப்ரீ பயர் உள்ளிட்ட கேம்கள் விளையாடி வந்ததாகவும், ஒரு சில விளையாட்டுகளில் வெற்றி பெற்றதால் நாளடைவில் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சஞ்சயின் ஃப்ரீ பயர் கேம் ஐடியை யாரோ ஹேக் செய்து திருடியுள்ளனர். அவ்வாறு திருடப்பட்ட ஐடியில் இருந்து கேம்கள் விளையாடி தோற்றதால் சஞ்சயின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.30,000 வரை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சய், ”கூடவே இருந்து எப்படி குழிபறிக்க தோனுது. இப்பவும் ஒன்னும் இல்ல யாருனு சொல்லிடுங்க. இல்ல வேற நம்பர்ல இருந்தாவது ஐ.டி பாஸ்வேர்ட அனுப்பிடுங்க” என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். மேலும், “கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க என்ன மாதிரி ஏமாறாதீங்க, எதாவது சாதிங்க” என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன்  விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சஞ்சயின் ஐடியை யாரோ ஹேக் செய்து விளையாடி அவர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விரக்தியில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அனைவரும் பகிர்ந்து வருவதால் அவர் வசிக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104

                                                                                                                   – Arunachalam Parthiban 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours