ஸ்வப்னாவின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது; பினராயி விஜயன் பதில்..!

Estimated read time 1 min read

கேரளா:

Kerala CM Pinarayi vijayan: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடத்தப்படவிருந்த ரூ.14.82 கோடி மதிப்புள்ள தங்கத்தை, இரண்டாண்டுகளுக்கு முன்பு மத்திய சுங்கத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர், சரித் குமார், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஸ்வப்னா சுரேஷ் கேரள முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார்.

இந்தக் கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயன்,  முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. சுமார் 16 மாதங்கள் சிறையில் இருந்த ஸ்வப்னா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாமீனில் விடுதலை ஆனார்.  இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறிய ஸ்வப்னா சுரேஷ்,  தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, அவரது மகள், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். மேலும், கடந்த 2016-ம் ஆண்டு முதலமைச்சர் பினராயி விஜயன் துபாய் வந்திருந்தபோது, தூதரகத்தில் பணியாற்றிய தன்னை தொடர்பு கொண்ட சிவசங்கர், முதலமைச்சர் ஒரு முக்கியமான பையை மறந்து விட்டுச் சென்று விட்டதால், அதனை உடனடியாக அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

அந்தப் பையில் பணம் இருந்தது பின்னரே தங்களுக்குத் தெரிய வந்ததாக ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். அரசியல் வட்டாரத்தில் ஸ்வப்னாவின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதென கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டதாகவும், தற்போது ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டில் துளி கூட உண்மை இல்லை எனவும் இது போன்று பொய்களை பரப்புவதன் மூலம், பயனடைய நினைப்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனத் தான் உறுதியாக நம்புவதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

                                                                                                                          – Chithira Rekha 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours