RBI Hikes Repo Rate: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளதாக அறிவித்தது.
கச்சா எண்ணெய் விலை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவின் மூன்று நாள் கூட்டம் ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்கி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் கூட்டத்தின் போது இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை மீண்டும் உயர்த்தலாம் என பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளதாக அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த தகவலை அளித்துள்ளார். ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மே 4ஆம் தேதி, ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. அப்போது, ரொக்க கையிருப்பு விகிதமும் (சிஆர்ஆர்) 0.50 சதவீதம் அதிகரித்து 4.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இது இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது. நாட்டில் பணவீக்க விகிதம் தொடர்ந்து 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி சார்பில் ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதால் வங்கிகளின் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ரெப்போ ரேட் உயர்வால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கொடுக்கும் கடன் வட்டி அதிகமாகும். வட்டி விகிதத்தை அதிகரிப்பதனால் இஎம்ஐ அதிகரிக்கும். .
ரெப்போ விகிதம் என்றால் என்ன?
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் விகிதம் ரெப்போ ரேட் எனப்படும். ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதால், வங்கிகள் அதிக விகிதத்தில் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும். இதனால் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதம் அதிகரிக்கும்.இது உங்கள் EMI களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளது. மறுபுறம், மொத்த விற்பனை பணவீக்கம் அதே மாதத்தில் 15.1% என்ற சாதனை அளவை எட்டியது. எனவே, சாதாரண குடிமக்களுக்கு விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கவனம் செலுத்துகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் எல்பிஜி விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.7% ஆக உயரும் என NSO கணித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். அதோடு, 2023ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
– Vidya Gopalakrishnan
+ There are no comments
Add yours