நடப்பவைத் தற்கொலையல்ல; கொலை.! – ஆன்லைன் ரம்மி – ஓர் பகீர் பின்னணி..!

Estimated read time 1 min read

Online Rummy Game Suicides : ஆன்லைன் ரம்மி விளையாட்டை ‘எது’ விளையாட வைக்கிறது.? தற்கொலை வரை அழைத்துச்செல்லும் அதன் தந்திரங்கள் என்னென்ன ?. அதன் கோரப் பசிக்கு பலியாகும் நடுத்தரக் குடும்பங்கள்.!

‘அப்படி என்னதான் இருக்குனு பாத்துரலாமே. சும்மா போரடிக்குது. நம்மள அப்படி எண்ண பண்ணிடப் போகுது இந்த ஆன்லைன் ரம்மி’.
எப்படிங்க இதுக்குள்ள போனீங்கனு கேட்டா, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள முடியாத பல பேர் சொல்லும் முதல் பதில் இதுதான்.
வெறும் விளையாட்டு, உயிரை பறிக்கும் அளவுக்கும் செல்லுமா என்ன ?.
இந்த விளையாட்டு அப்படிப்பட்டதுதான். அன்றாட வாழ்வின் பரபரப்புகளின் அலுப்புகளில் இருந்து விடுபட மனித மனங்களுக்கு நல்ல தீனியாக சமூக ஊடகங்களும், விளையாட்டு கேம்களும் இருக்கும் நிலையில், இந்த ஆன்லைன் ரம்மி ஒருபடி மேலாக பணம் தரும் கிளர்ச்சியையும் தருகிறது.

முதலில், இந்த ஆப்பை டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் பணம் கிடைக்கிறது. அடுத்த முறை விளையாடும்போதும் பணம் கிடைக்கிறது. அதற்கடுத்த முறை பணத்தை இழப்பதுபோல் இழந்து, மீண்டும் பணம் கிடைக்கிறது. அதற்குப் பிறகு எவ்வளவு பணத்தையும் அதில் முதலீடாக போட்டுப் பார்க்கும் அளவுக்கு மனதை தயார்படுத்திவிடுகிறது இந்த ஆன்லைன் ரம்மி. இந்த விளையாட்டில் இருந்து வெளியேறியவர்கள் சொன்ன பெரும்பாலான தகவல் இப்படியாகத்தான் இருக்கிறது.

பணத்தை இழப்பவர்கள், மீண்டும் பணத்தை கடன் பெற்று முதலீடு செய்து விளையாடுகிறார்கள். அதிலும் தோல்விதான். ஒருகட்டத்தில் வெளியில் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், இந்த விளையாட்டின் போதையில் இருந்து விடபடுவும் முடியாமல் விளையாடுபவர்கள் தற்கொலையை நோக்கிச் செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த விளையாட்டால் எத்தனையோ தற்கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.

ஆன்லைன் ரம்மியின் உண்மை முகம்

பொதுவாக, செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணங்களை திசைத்திருப்புவதற்கான வழிகளில்தான் எல்லா ஆப்களும் களம் இறங்கியிருக்கின்றன. எந்த ஆப்பை இறக்கினாலும் ‘ஆன்லைன் ரம்மி விளையாடலாம் வாங்க. கோடிக்கோடியால் பணம் சம்பாதிக்கலாம் வாங்க’ என்று நோட்டிஃபிகேஷனைக் காட்டுகிறது. இதனைக் கண்டுகொள்ளாமல் கடந்துசெல்பவர்கள் தப்பித்தார்கள். உள்ளே சென்றால் அதன் உலகம் பயங்கரமானது. ஒருவிதமான பயத்தை உண்டுபண்ணுவதற்காக இதைச் சொல்லவில்லை. உணமையிலே இதன் முழு திட்ட வடிவத்தைப் பாருங்கள்.

ஆப்பை டவுன்லோடு செய்து உள்ளே வந்துவிடுகிறீர்கள். பெரிய தொகையெல்லாம் வேண்டாம் போதுமான அளவு வெற்றிபெற்று பணம் சம்பாதித்தால் போதும் என நினைக்கிறீர்கள். எதிரில் யார் ஆடினாலும் நம்மால் குறைந்த அளவிற்காவது பணத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே செல்கிறீர்கள். முதலில் நாம் அனைவரும் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், ஆன்லைன் சூதில் வெல்வது மிகமிகக் கடினம் என்பதுதான். ஏனெனில், நமது எதிர்ப்புறம் விளையாடுவது நிச்சயமாக மனிதர்கள் இல்லை. ஏற்கனவே செட் செய்து வைக்கப்பட்ட வெறும் கோடிங்குகள் (Coding). அதாவது, Random Number Generator எனச் சொல்லப்படும் அதிநுணுக்கமான அல்காரிதம் (Algorithm) வகையால் உருவாக்கப்பட்டது.

ஆரம்பத்தில் உங்கள் ரம்மிக்கு ஏற்றவாறு நம்பர்களை தேர்ந்தெடுத்து அனுப்பும். வெற்றிபெற்றவுடன் உங்களது அக்கவுண்டுக்கு பணத்தை செலுத்திவிடுகிறது. பிறகு, மீண்டும் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆசையில் விளையாடுகிறீர்கள். இப்போதும் வெற்றி அடையலாம். திடீரென தோல்வியை தந்து, நமது மன ஓட்டத்தை அதைக் கண்காணிக்கிறது. நபருக்கு ஏற்றாற் போல் இந்த சோதனை மாறுபடுகிறது.  நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து, நீங்கள் அடிமையாகி விட்டீர்களா, இல்லையா என்பதையும் அந்த அல்காரிதம் உற்றுப்பார்க்கிறது.

ஒருவேளை நீங்கள் அடிமை என்று அந்த அல்காரிதம் கண்டுபிடித்துவிட்டால், ஆன்லைன் ரம்மியின் அபாயகரமான உலகில் நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். அதற்கான வலைகளை தந்திரமாக அது வீசுகிறது. எப்படியென்றால், ஒருவேளை கொஞ்ச நாட்கள் விளையாடி பணம் வீணாகிறது என்று முடிவெடுத்துவிட்டு ஆன்லைன் ரம்மி ஆப்பை அன்இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த விளையாட்டின் மீது எங்கோ ஒரு ஓரம் இருக்கும் அந்த இச்சைக்கு தீனிபோடும் வகையில், மூன்று நாட்கள் கழித்து உங்கள் அக்கவுண்டில் தானாகவே பணம் வந்துவிழும். ‘போனஸாக உங்களுக்கு பணம் கொடுத்திருக்கிறேன் ; வா…வந்து விளையாடு’ என்று அந்த அல்காரிதம் அழைக்கும். அதன்பிறகு எல்லாம் தெரிந்த கதைதான்.

சரி, வெற்றிபெறும் பணத்தையாவது எடுக்க முடியுமா ?. உதாரணமாக 50,000 ரூபாய் வெற்றிபெறுகிறீர்கள் என்றால், அவ்வளவையும் ரொக்கமாக ஏடிஎம்மில் எடுக்க முடியாது. அதற்கெல்லாம் விதி வேறு வைத்திருக்கிறது இந்த ஆன்லைன் ரம்மி. இதில், லட்சக்கணக்கில் வென்று பணம் சம்பாதிக்கலாம் என்று கனவு காணாதீர்கள். ஏற்கனவே உருவாக்கப்பட்ட அந்த அல்காரிதம் எண்களைத் தாண்டி உங்களால் ஒருபோதும் வெல்லவே முடியாது. யாராவது, ஒரு கோடி ரூபாய் ஆன்லைன் ரம்மியில் வென்றிருக்கிறார்கள் என்ற செய்தியை நீங்கள் படித்ததுண்டா ? எல்லாம் அதன் அதிநுணுக்கமான தந்திரம்தான் காரணம்!

பறிபோகும் குடும்பங்கள் ; அரங்கேறும் தற்கொலைகள்

இந்த அபாயகரமான விளையாட்டுக்கு எத்தனை குடும்பங்கள் பலியாகி இருக்கின்றன என்று திரும்பிப் பார்த்தால், இதன் விபரீதம் புரியும். அத்தனைப் பேரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். சமீபத்தில் முதல்முறையாக ஒரு பெண்ணை காவு வாங்கியிருக்கிறது இந்த விளையாட்டு. சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பவானி, ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ரயிலில் தினமும் வேலைக்கு செல்லும்பொழுது பொழுதுபோக்கிற்காகத்தான் இந்த ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

கொஞ்ச நாட்களிலேயே அந்த விளையாட்டுக்கு அடிமையானார் பவானி. எந்த அளவுக்கு என்றால் தனது 20 சவரன் நகைகளை விற்று அந்தப் பணத்தை ரம்மி விளையாடி தோற்கும் அளவுக்கு. அதுமட்டுமல்லாமல், தனது சகோதரியிடம் மேலும் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அந்தப் பணத்திலும் ரம்மி விளையாடித் தோற்றுள்ளார். விளைவு. வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை. நாளுக்கு நாள் வீரியமடையும் இந்த அரக்கத்தனமான விளையாட்டு அரசியல் தளத்திலும் விவாதமாகியுள்ளது.

ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே தமிழக சட்டசபையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்ததால், மீண்டும் மாநிலத்தில் ஆன்லைன் ரம்மி என்ற விஷம் பரவ தொடங்கிவிட்டது. இதையடுத்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்பட தற்போது அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

என்ன செய்யப்போகிறது தமிழக அரசு ?

‘காவல்துறை டிஜிபியே இது ஆன்லைன் ரம்மி அல்ல ; ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம் என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களைத் தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?” என்று தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணியும் இந்த விவகாரத்தை முக்கியமாக கையிலெடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த 30-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘’தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றப்படும்’’ என்று கூறியிருந்தார். அதை வரவேற்று அடுத்த நாள் அறிக்கை வெளியிட்டேன். அந்தப் பதிலின் சூடு தணிவதற்கு முன்பாகவே, புதுக்கோட்டையில்  செய்தியாளர்களைச் சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, ‘‘ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம்.

அதில் நல்லத் தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்று விளக்கமளித்துள்ளார். தமிழ்நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினையில், ஒரே வாரத்தில் திங்கள்கிழமை ஓர் அமைச்சர் ஒரு நிலைப்பாட்டையும், சனிக்கிழமை இன்னொரு அமைச்சர் இன்னொரு நிலைப்பாட்டையும் தெரிவிப்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் அதனால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க புதிய தடை சட்டம், மேல்முறையீடு என்ற இரண்டில் எந்த ஆயுதத்தை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். மேல்முறையீடு தான் தமிழக அரசின் விருப்பம் என்றால், அதன் பாதகங்களை உணர்ந்து, அதற்கு பதிலாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பலதரப்பட்ட கோரிக்கைகளைத் தாண்டி தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கிராமங்களில் இப்போதும் ஊருக்கு வெளியே மறைமுகமாக சூது விளையாடும் பழக்கம் உண்டு. பொதுச்சமூகத்திலும், கிராமப் புறத்திலும் சரி, குற்றமாக கருதும் செயலது. ஆனால், ஆன்லைனில் வெளிப்படையாகவே வீட்டில் உட்கார்ந்துகொண்டு இந்த சூதாட்டத்தை பலரும் ஆடுகின்றனர். மிதமிஞ்சிய பணம் வைத்திருப்பவர்களும், இருக்கும் பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவர்களும் சூதாட்டம் விளையாடலாம்.

அவர்களுக்கு ஏற்படும் இழப்பென்பது, வெறும் பண இழப்புதான். ஆனால், பேராசையால் நடுத்தர மக்கள் ஆன்லைன் ரம்மி என்னும் வலைக்குள் விழுந்து, அடிமையாகி தங்களது வாழ்க்கையையே இழக்கிறார்கள். ஒருகட்டத்தில் உயிரையும். ஆன்லைன் மூலம் பணத்தை சம்பாதித்துக் கொண்டு, தனிமனித உளவியலோடு விளையாடி, கடைசியில் கொலையும் செய்கிறதென்றால் இதனை வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஜனநாயகப் பூர்வமான ஓர் அரசுக்கு அறமல்ல. ஏனெனில், ஒரு மனிதரின் இழப்பென்பது, ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. ஒரு சமூகத்தின் இழப்பும் கூட.!

                                                                                                                                – நவீன் டேரியஸ்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours