விசாரணை கைதி விக்னேஷ் கொலை – சிறையில் உள்ள 5 காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை ஏப்ரல் 18ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது விக்னேஷிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார்.

வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கால்துறையினர் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.மேலும், இது குறித்து வெளியில் தகவல் தெரிவிக்காமல் இருக்க விக்னேஷின் குடும்பத்தினருக்கு போலீஸார் தரப்பில் ரூ.1 லட்சம் லஞ்சம் வழங்கியதாக கூறப்பட்டது.

இதனிடையே விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு  மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

.இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் எம்.ஜி.முனாஃப், சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.குமார், ஊர்க்காவல் படை வீரர் பி.தீபக், ஆயுதப்படை காவலர் பி.ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் வி.சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் முனாஃப், குமார், தீபக், ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் நிலைய மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் யாருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

                                                                                                              – Arunachalam Parthiban

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours