பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் படத்தில் ‘ஸ’ இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கான விழா ரோம் நாட்டில் நடைபெற்றது. அப்போது, புனித போப் பிரான்சிஸ், தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வாட்டிகன் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
இதனை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார். இதனிடையே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது ட்விட்டர் பதிவில், ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என்று பதிவிட்டார். அத்துடன், அவர் புதிதாக வேறொரு தமிழ்த்தாய் ஓவியத்தையும் பதிவிட்டிருந்தார். இந்த ஓவியங்களில் எந்த ஓவியம் தமிழ்த்தாய் ஓவியம் ? என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழ்த்தாய் ஓவியத்தில் தலைவிரிக்கோலத்துடன் தமிழன்னை இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் கறுப்பு நிறத்துடன் இருப்பதாகவும் பாஜகவினர் விமர்சித்தனர். அப்போது, தமிழ் கறுப்புதான், தமிழர் கறுப்பு தான், தமிழன்னையும் கறுப்புதான் என பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த தமிழன்னைக்கு மாற்றாக தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்திருந்த தமிழ்த் தாயை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
அதாவது, அண்ணாமலை பகிர்ந்திருந்த ஓவியத்தில் ‘தமிழ் தாய்’ என எழுதப்பட்டுள்ளது. முதலில், ‘தமிழ் தாய்’ என்று வரவே வராது. ‘தமிழ்த் தாய்’ என்றுதான் வரவேண்டும். ‘த்’ என்ற ஒற்று போடாமல் இருப்பதற்கு பலரும் அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். ‘தமிழை முதலில் ஒழுங்காக எழுத வேண்டும் அண்ணாமலை அவர்களே’ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், அண்ணாமலை பகிர்ந்திருந்த தமிழ்த்தாய் படத்தில் வடமொழி சொல்லான ‘ஸ’ எழுதப்பட்டிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.
‘தமிழ்த்தாய் படத்திலேயே ‘ஸ’வை கொண்டு வந்திருக்கிறீர்களே அண்ணாமலை’ என்றும் இணையத்தில் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், தமிழ்த்தாயின் கால் கட்டை விரலுக்கு பக்கத்தில் உள்ள இரு விரல்களின் உயரங்களையும் குறைத்திருப்பது என்பன உள்ளிட்ட பல விவகாரங்களை சுட்டிக்காட்டி அண்ணாமலைக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-நவீன் டேரியஸ்
+ There are no comments
Add yours