கொழும்பு,
கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ந்தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பல பகுதிகளில் கலவரம் வெடித்தது.
கடந்த 12ந்தேதி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார். கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற போராட்டக்காரர்களின் முழக்கத்திற்கு தனது ஆதரவையும் வழங்கினார். பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பத்துக்கு தீர்வு ஏற்படும் வகையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
எனினும், அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாள்தோறும் அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. தொடர்ந்து, வரலாறு காணாத வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதனால், கொழும்புவை சேர்ந்த டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது வாழ்க்கை தேவைக்காக தற்போது தேசிய கொடிகளை விற்கும் பணியில் இறங்கி உள்ளனர். போராட்டம் நடைபெறும் கல்லே பேஸ் பகுதியில் அவர்கள் இலங்கை தேசிய கொடியை விற்று பிழைப்பு நடத்துகின்றனர்.
கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலாவாசிகளின் வருகை குறைவு, அந்நிய செலாவணி பற்றாக்குறை ஆகியவற்றால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இலங்கை முழுவதும் அது எதிரொலிக்கிறது. இதனால் வாடகை வாகன ஓட்டுனர்கள் அதில் இருந்து சொற்ப வருவாயையே பெறுகின்றனர்.
இதுபற்றி ஆட்டோ ஓட்டுனரான பியல் என்பவர் கூறும்போது, அடிப்படையில் நான் ஆட்டோ ஓட்டுனர். பெட்ரோல் பற்றாக்குறை, அரசின் தினசரி ஊரடங்கு அறிவிப்பு ஆகியவற்றால், போராட்ட பகுதியில் கொடி விற்பனையில் இறங்கியுள்ளேன். முன்பெல்லாம், நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை சம்பாதித்தேன். ஆனால், தற்போது பல நாட்களாக போதிய வருவாய் இல்லை என கூறுகிறார்.
கொடி விற்பதில் அதிக வருவாய் இல்லை என்றாலும், ஆட்டோ தொழிலை விட நன்றாக உள்ளது. எரிவாயு இல்லை. உணவு, டீசல் போதிய அளவு இல்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்களே கூறுங்கள்… 4 பேர் கொண்ட என்னுடைய குடும்பத்தினரை எப்படி நான் காப்பாற்றுவது? என அவர் கேட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கைவாசிகள், இரக்கப்பட்டு இவர்களை போன்றவர்களிடம் இருந்து கொடிகளை வாங்குகின்றனர். ஊழல் அரசு, அரசியல்வாதிகளின் தவறான நிர்வாகம் ஆகியவை இலங்கை மக்களை நெருக்கடியில் கொண்டு சென்று விட்டது என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
+ There are no comments
Add yours