இறைச்சிக்காக மாடுகளைத் திருடிய கும்பல் கைது..!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னையைச் சுற்றியுள்ள சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் கேட்பாரின்றி மேய்ந்து வருகின்றன.
குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலைகளின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் ஓரமாக மாடுகள் உறங்குவதும், ஓய்வெடுப்பதுமாக இருக்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இப்படி கேட்பாரின்றி மாடுகளை மேய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், இந்த சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இப்படி மேய்ச்சலுக்காக அனுப்பி வைக்கப்படும் மாடுகளை திட்டமிட்டு குறிவைத்து இறைச்சிக்காக திருடும் கும்பல் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த பாரேரி பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் ராஜா. இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக 4 மாடுகள் உள்ளது. இருவரும்  கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால் மாடுகளை அருகில் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்காக விட்டுவிடுவது வழக்கம். அதன்படி, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது மாடுகளைக் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாரியம்மாள், ராஜா ஆகியோர் சுற்றும்முற்றும் மாடுகளைத் தேடிப் பார்த்தனர். எங்கும் காணாததால் சோகமடைந்த அவர்கள், போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

காட்சி – 2

பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் போலீஸார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குட்டி யானை வாகனம் ஒன்று மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தது. அந்த வாகனத்தை போலீஸார் மடக்கி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் திருநீர்மலைப் பகுதியைச் சேர்ந்த கலையரசன் (26), பரமசிவன் (19) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் போலீஸாரின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார், அவர்கள் இருவரும் என்ன செய்கின்றனர், எங்கு பணிபுரிகன்றனர் என்ற விவரங்களைச் சேகரித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருநீர்மலைப் பகுதியில் மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாகவும், அதற்காக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து மாடுகளைத் திருடி வந்ததாகவும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த சங்கர் நகர் போலீசார், மாட்டை மீட்டனர். இதனை தொடர்ந்து, கலையரசன் மற்றும் பரமசிவன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

-நவீன் டேரியஸ்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours