திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த சத்தரை கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பிராஜ். இவருக்கு சந்திரா என்ற மனைவியும் ஆண், பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி சந்திராவுக்கு பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்குப் பின் நேற்று முன்தினம் சந்திரா வீடு திரும்பிய நிலையில், அவர் குழந்தையைக் கொண்டு வரவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நம்பிராஜ், குழந்தை எங்கே என சந்திராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், குழந்தை இறந்து விட்டது எனவும், யாரிடமோ கொடுத்து விட்டேன் எனவும் சந்திரா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த நம்பிராஜ் மற்றும் அவரது உறவினர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பேரம்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது, குழந்தை நலமாக இருந்ததாகவும், தாயுடன் குழந்தையை அனுப்பியதாகவும், மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சந்திராவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, வறுமை காரணமாக குழந்தையை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
சந்திராவின் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் தகவல் கூறியதாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் – ஜெயந்தி என்ற தம்பதி, சந்திராவிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை வாங்கியுள்ளனர். இதனையடுத்து, கமலக்கண்ணன் – ஜெயந்தி தம்பதியரிடம் இருந்து காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். இருதரப்பினரையும் எச்சரித்த காவல்துறையினர் குழந்தையை தந்தை மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர். பெற்ற குழந்தையை தாயே வறுமை காரணமாக விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours