பச்சிளம் குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை..!

Estimated read time 1 min read

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பச்சிளம்  குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனீஸ்வரன் மற்றும் திவ்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்த பெண் குழந்தைக்கு தர்ஷினி என பெயர் சூட்டி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். திடீர் திருப்பமாக குழந்தை தர்சினிக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டது தெரியவந்தது.

தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு இவ்வாறு நோய் உள்ளது என தெரிந்து மனமுடைந்த திவ்யா வேதனையில் இருந்துள்ளார். இதனால் தன் கணவரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். இறுதியாக எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்த திவ்யா கணவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு தன் குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

அங்கிருந்த ஒரு ஓட்டுக்கொட்டகையில் முதலில் தனது மகள் தர்சினிக்கு பூச்சி மருந்தை உணவில் கலந்து கொடுத்துள்ளார். பிறகு தான் அணிந்திருந்த சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய கணவர் முனீஸ்வரன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லை எனத் தெரிந்தவுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது தனது மனைவியும் 8 மாத குழந்தையும் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே நயினார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க அங்கு வந்த காவல்துறையினர் திவ்யா மற்றும் குழந்தை தர்ஷினி உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். திவ்யா தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமக்குடி மற்றும் நைனார் கோயில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

                                                                                                                                    -Gowtham Natarajan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours