விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும்..!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னை தலைமைச் செயலக காலனி விக்னேஷ் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவையில் இன்று நேரம் இல்லா நேரத்தில்  பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு மற்றும்திருப்பூர் மாவட்டங்களில் நகைக்காக வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினார்.

இதற்கு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதேபோல் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த  விக்னேஷின் வழக்கைப் பற்றியும் பேசினார்.

இந்த விவகாரத்தில் சட்டப்பேர்வையில் அதிமுக தரப்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிச்சாமி, உடற்கூறு ஆய்வு அறிக்கையில்,  வந்திருக்கிறது விக்னேஷின் உடலில்  13 இடங்களில்  காயம் இருந்தது என்பதை குறிப்பிட்டார்.

இது கவலையளிப்பதாகவும், எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், விக்னேஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கையின்படி விக்னேஷின் லாக்கப் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தினார்.

ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்

முதலமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விக்னேஷின் மரணம் தொடர்பாக இந்த  வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அப்போதுதான் நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

ஏற்கனவே சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில் சிபை விசாரணை தேவையில்லை என்று ஆளும்கட்சித் தரப்பில் கூறப்பட்டது. எனவே தங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததால், வெளிநடப்பு செய்வதாக தெரிவித்து அதிமுகவினர், அவையில் இருந்து வெளியேறினார்கள்.

                                                                                                                           – Malathi Tamilselvan 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours