அதானி குழுமத்தின் அங்கமான அதானி பவர் நிறுவனத்தின் லாபம், கடந்த மூன்று மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.13 கோடியாக இருந்த அதானி பவர் நிறுவனத்தில் லாபம், 2021-22-ம் ஆண்டின் கடைசி காலாண்டில் ரூ.4,646 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 357 மடங்கு அதிகமாகும்.
ஒட்டு மொத்த நிதியாண்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதானி பவர் நிறுவனத்தின் லாபம் ரூ.4,912 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 287% அதிகமாகும். கடந்த 3 மாதங்களில் அதானி நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருமானம் 93 சதவீதம் அதிகரித்து ரூ.13,308 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த நிதியாண்டில் அதானி பவர் நிறுவனத்தின் வருமானம் ரூ.31,686 கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வடமேற்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்தியாவில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பிய சந்தைகளில் நிலவும் உறுதியற்ற நிலை, சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்த நிலையில், மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளதால் மார்ச் மாதத்தில் மட்டும் மின்சாரத்தின் விலை ரூ.3/kWh-ல் இருந்து ரூ. 8.23/kWh-ஆக அதிகரித்துள்ளது.
இந்த வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி, இந்தியாவின் எரிசக்தி தேவையை மலிவு விலையில் பூர்த்தி செய்ய அதானி நிறுவனம் உறுதியாக உள்ளதெனத் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours