கடந்த மாதம் 27ம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவிற்கும், அதன் அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மஹோபாவிற்கும் இடையே ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை வெளியே தள்ளியதாக 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், அந்த இளைஞரின் பாலியல் சீண்டலில் இருந்து தப்ப முயன்றபோது 25 வயதுடைய பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்டுள்ளார். அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
‘உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள பன்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூரி கிராமத்தில் வசிக்கும் ராம் பாபு யாதவ் (26) என்பவரை கைது செய்துள்ளோம். அவர் திகாம்கரில் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்தன, அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் கேட்பாரற்று கிடந்த மொபைல் போனில் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமான மொபைல், அத்துடன் சக பயணிகளிடமிருந்து அவர் தோற்றம் குறித்த தகவல்கள் என அனைத்தும் பெறப்பட்டன. அத்துடன் சிசிடிவி காட்சியின் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் உத்தரபிரதேசத்தில் உள்ள பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பாகேஷ்வர் கோவிலுக்குச் சென்றுவிட்டு ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, கஜுராஹோ காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கு மேல் நடவடிக்கைக்காக ரேவா ஜிஆர்பிக்கு மாற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
‘நான் சத்தர்பூர் பாகேஷ்வர் தாம் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தேன். பின்னர் ரயிலில் திரும்பிக்கொண்டிருக்கும் நேரத்தில் சக பயணி ஒருவன் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த ஆரம்பித்தான். நான் முதலில் அவனை தடுத்து தட்டிவிட்டேன். பின்னர் மீண்டும் அவ்வாறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவுடன் அவன் கையை கடித்தேன். சுமார் 30 வயதுடைய அந்த நபர், ராஜ்நகர் அருகே ரயில் சென்றபோது ஓடும் ரயிலில் இருந்து என்னை தூக்கி எறிந்தான்’ என்று பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாதவ் என்ற அந்த இளைஞர், 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours