சென்னை :
சிவபெருமான் மற்றும் தில்லை நடராஜரின் நடனம் குறித்து அவதுாறாக வீடியோ வெளியிட்டு வரும் யு2 புரூட்டஸ் யூடியூப் சேனலை முடக்கக் கோரியும், அதில் பேசிய ‘மைனர்’ விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
U2 Brutus என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் மைனர் விஜய் என்பவர், தனது சேனலில் தொடர்ந்து பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட அவர் நடராஜப் பெருமான் காலை ஏன் தூக்கி வைத்து இருக்கிறார் என விளக்குவதாக ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
யூ 2 புரூட்டஸ் சேனல்
அந்த வீடியோவில் நடராஜர் குறித்து அவதூறாகவும், அவரது நடன அசைவுகள் குறித்து மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் கேவலமாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் காணொளி அவரது சேனலில் ஒளிபரப்பு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. அந்த காணொளி பலதரப்பட்ட இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி இந்து மதத்தைச் சார்ந்த பல்வேறு தரப்பினர் காவல்துறையிடம் சம்பந்தப்பட்ட நபர் மீது புகார்களை கொடுத்து வந்தனர்.
நடராஜர் குறித்து அவதூறு
இந்நிலையில் அகில உலக சைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகியான சென்னையை சேர்ந்தவர் சிவகுமார் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிவபெருமான் மற்றும் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சுவாமியின் தில்லைகாளி நடராஜர் நடனம் குறித்து யு 2 புரூட்டஸ் என்ற பெயரில் சமூக வலைதளமான யூட்யூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், சேனல் நடத்தும் மைனர் விஜய் என்பவர், மிகவும் அருவருப்பாக பேசியுள்ளார்.
டிஜிபியிடம் புகார்
இது இந்து மக்கள் மனதை புண்படுத்துவதோடு, பல ஆண்டுகளாக மக்களிடையே இருக்கும் நம்பிக்கைகளை முடக்குவது போல் உள்ளது. இதனால் மத மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் யு 2 புரூட்டஸ் யூட்யூம் சேனலை முடக்க வேண்டும். மைனர் விஜய் மற்றும் அவரது பின்னணியில் இருக்கும் சமூக விரோத கும்பல்கள் குறித்து விசாரித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த புகார் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
வலுக்கு எதிர்ப்பு
இதே கருத்தை வலியுறுத்தி, சென்னை திருவொற்றியூரில் செயல்படும் வடிவுடைமாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை நிர்வாகி பாலமுருகன் மற்றும் ஜெகம் பெண்கள் அமைப்பு நிர்வாகி ஜெகசுந்தரி ஆகியோரும், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே இவ்விவகாரத்தில் இந்து மக்கள் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் மைனர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours